பட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா?

இராகவன் கருப்பையா –  பிரதமர் முஹிடினின் நிலைப்பாடும், ‘மயக்கமா கலக்கமா,  மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா’, என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் ஒன்றாக நகர்ந்துகொண்டிருப்பதைப் போல் தெரிகிறது.

இந்த சூழ்நிலை எந்த அளவுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அல்லது மாற்றியமைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

கடந்த மார்ச் மாதம் பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து தினம்தோறும் அவர் மேற்கொண்டு வரும் நகர்வுகள் அவருடைய நிலைப்பாட்டை அனைவருக்கும் படம் பிடித்து காட்டுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

கடந்த 2 வாரங்களுக்கு முன் கோறனி நச்சலை காரணம் காட்டி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை கொண்டுவர அதிரடியாக அவர் மேற்கொண்ட முயற்சியின் பின்னணி என்னவென்று கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரியும்.

அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் அவருடைய பிரதமர் பதவி இன்னமும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அவசரகாலச் சட்டத்திற்கு பேரரசர் ஒப்புதல் அளித்திருந்தால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் மொத்தமாக முஹிடினின் கைவசம் வந்திருக்கும் – நாடாளுமன்றம் கூட வேண்டிய அவசியமில்லை, வரவு செலவுத் திட்டத்திற்கு மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை, அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அவருடைய பதவிக்கு ஆபத்தும் இல்லை. நானே மந்திரி நானே ராஜா என்ற நிலைதான்!

பொதுவாக அந்நிய நாட்டின் படையெடுப்பு, கட்டுக்கடங்காத தொற்று நோய், கட்டுப்படுத்த இயலாத உள்நாட்டுக் கலவரம், போன்ற சூழ்நிலைகளில்தான் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்படும்.

மலேசிய வரலாற்றில் தேசிய நிலையிலான அவசரகாலச் சட்டம் என்றால் கடந்த 1963ஆம் ஆண்டில் மலேசியா மீது இந்தோனேசியா மேற்கொண்ட ராணுவத் தாக்குதலின் போதும் 1969ஆம் ஆண்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரங்களின் போதும், இரு முறை பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆக தற்போது 3ஆவது அலையாக பரவிவரும் கோறனி நச்சலை அரசாங்கம் நல்ல முறையிலேயே சமாளித்து வருவதால் அவசரகாலச் சட்டத்திற்கு அவசியமில்லை என பேரரசர் அறிவித்ததைத் தொடர்ந்து முஹிடின் தனது பதவியை தற்காத்துக்கொள்ள மற்ற பல யுக்திகளை கையாள்வதைப் போல் தெரிகிறது.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அம்னோவின் ரஸாலி ஹம்சா உள்பட 25கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஹிடினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை கொண்டுவர இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், மீண்டும் கோறனி நச்சலை காரணம் காட்டி இவ்வாரம் முழுவதும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நண்பகல் 1 மணியோடு முடிந்துவிடும் என திடீரென்று செய்யப்பட்ட அறிவிப்பானது, நேரத்தை கட்டுப்படுத்தி மேற்குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு அவகாசமில்லாமல் செய்வதற்கான ஒரு யுக்தி என்றே நம்பப்படுகிறது.

அமைச்சர் ஒருவரின் ஒப்புதலின் பேரிலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியும் என சபாநாயகர் ஆர்ட் ஹருன் ஏற்கெனவே அறிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போதும் இதே போன்ற நிலைதான்.

அப்போதும் கூட கோறனி நச்சிலை காரணம் காட்டி ஒரே நாளில் கூட்டத்தை முடித்துக்கொள்ள உத்தரவிட்டார் முஹிடின். அதோடு, எந்த ஒரு கேள்வி பதிலுக்கும் அனுமதியில்லை, பேரரசரின் உரை மட்டுமே இடம்பெறும் என அவர் செய்த முடிவு எதிர்க்கட்சியினரின் ஏளனத்திற்குள்ளானதும் நாம் அறிந்த ஒன்றுதான். முன்னாள் பிரதமர் மகாதீர் அப்போது கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தடுப்பதற்காகவே முஹிடின் அப்படி செய்தார் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால் இம்முறை தனக்கு எதிரான பலப்பரீட்சையை எவ்வகையிலும் அவர் தவிர்க்கவே இயலாது என்று தோன்றினாலும், பண ஊழலின் வழி அரசியல் வாதிகளை மடக்கி போடுவதை உணரலாம்.

வரலாறு காணாத வகையில் கொண்டுவரப்பட இருக்கும் 25கும் மேற்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி எப்படியாவது தட்டிக் கழித்தாலும் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை அவர் எதிர்நோக்கத்தான் வேண்டும்.

எனவே கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அவர் எதிர்நோக்கி வரும் சவால்களில் இந்த விவகாரம்தான் மிகக் கடுமையானது என்றால் அது மிகையில்லை.

நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்தை முன்மொழி்ந்துள்ளார். இது மீதான விவாதங்களின் இறுதியில்  அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தனது பிரதமர் பதவியை முஹிடின் ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் ஜனநாயக முறைப்படி பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பேரரசரின்  ஒப்புதலின் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அல்லது பேரரசர் பெரும்பான்மையை நிருபிக்கும் நபருக்கு வாய்ப்பளிக்க இயலும்.

ஆனால் கோறனி நச்சலின் தற்போதைய தாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுத் தேர்தலுக்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லையென்றே நம்பப்படுகிறது.

மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள வேறொருவரை அரசாங்கம் அமைக்க பேரரசர் அழைப்பதுதான் விவேகமானது. ஆனால் முவாபாக்காட் என்ற இன-மத வாத கூட்டணியினர் (அம்னோ – பாஸ்) இதற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.

எனவே இத்தகைய சாத்தியக் கூறுகளையெல்லாம் நன்றாகவே உணர்ந்துள்ள முஹிடினின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.