மக்களவை | அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்னும் முடிவு செய்யவில்லை.
தனது ஆலோசனைகளைத் தேசியக் கூட்டணி அரசாங்கம் (பி.என்.) கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
“பி.என். அரசாங்கத்தின் 2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதிலிருந்து நானும் எனது கட்சியும் ஒதுங்கி இருக்கிறோம்.
“எங்களின் ஆக்ககரமான திட்டத்திற்கு இந்த முறை பட்ஜெட்டில் இடம் வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர், பட்ஜெட் தொடர்பான இன்றைய மக்களவை விவாதத்தின் போது கூறினார்.
‘பெஜூவாங்’ கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை, அக்கட்சியின் 3 எம்.பி.க்களான முக்ரிஸ் மகாதிர் (ஜெர்லூன்), அமிருதீன் ஹம்சா (குபாங் பாசு), மற்றும் ஷாருதீன் சாலே (ஸ்ரீ காடிங்) ஆகியோர் இப்போது பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேறிய பின்னர், சுயேட்சையாக மக்களவையில் அமர்ந்திருக்கிறார்கள்.
முன்னதாக, அம்முன்னாள் பிரதமர், “சாத்தியமான பட்ஜெட்டை” மட்டுமே ஆதரிப்பதாகக் கூறியிருந்தார்.
2021 வரவுசெலவுத் திட்டத்தில், பல அமைச்சுகளின் அலுவலகங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை விமர்சித்த அவர், அந்த ஒதுக்கீடுகளை முதலில் ஒத்திவைக்க வேண்டும், கோவிட் -19 தொடர்பான செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
“பல்வேறு அமைச்சுகளின் மேம்பாட்டிற்கான ஒதுக்கீடாக 520 விழுக்காடு அதிகரிக்கும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில், சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் அலுவலக மேம்பாட்டிற்கு RM160 மில்லியன் மற்றும் அதன் வெளிநாட்டு அலுவலகக் கட்டிட மேம்பாட்டிற்கு RM64.4 மில்லியன், உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அலுவலக மேம்பாட்டிற்காக RM231 மில்லியன்.
“2020-ம் ஆண்டில் RM7.9 பில்லியனாக இருந்த பிரதமர் திணைக்களத்திற்கான ஒதுக்கீடு, 2021-ல் RM11.7 பில்லியனாக அதிகரித்துள்ளது.
“சிறப்புத் திட்டத்திற்கு RM100 பில்லியனில் இருந்து RM1 பில்லியன் தேவையா? அங்காசாபுரி வளாகத்தை மேம்படுத்த RM125 மில்லியன் தேவையா? இந்த திட்டங்களை நாம் ஒத்திவைக்க வேண்டும்,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
கோவிட் -19 காரணமாக, அதிகமான மக்கள் வேலை இழந்துள்ள போது, அமைச்சரவையில் மிக அதிகமான உறுப்பினர்கள் எதற்காக? எனவே, அமைச்சரவையின் அளவைக் குறைக்க வேண்டும் என்றும் டாக்டர் மகாதீர் பரிந்துரைத்தார்.
அவரைப் பொறுத்தவரை, நிர்வாகத்தைப் பாதிக்காத வகையில், தற்போதைய அமைச்சரவையின் அளவைக் குறைப்பது நல்லது.