எதிர்க்கட்சிகள் தடையை மீறி பேரணி: விரக்தியில் எதிர்க்கட்சிகள் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றன – இம்ரான்கான் கண்டனம்

எதிர்க்கட்சிகள் தடையை மீறி பேரணி: விரக்தியில் எதிர்க்கட்சிகள் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றன – இம்ரான்கான் கண்டனம்

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை அமைத்துள்ளன.இந்த கூட்டணி பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுகூட்டங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில் பி.டி.எம். கூட்டணி சார்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பெஷாவர் நகரில் இந்த பேரணியை நடத்துவதற்கு அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும் தடையை மீறி இந்த பேரணி நடந்தது. இந்த பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான மரியம் நவாஸ் உள்பட 11 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான் கான் அரசை கடுமையாக விமர்சித்து பேசினர்.

இதற்கிடையில் தடையை மீறி பேரணியை நடத்தியதற்கு பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் “எனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான விரக்தியில் எதிர்க்கட்சிகள் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றன. நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பின்னால் பெரும் கூட்டம் இருக்கலாம். ஆனால் அதன் மூலம் எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்

dailythanthi