ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய அதிபர் மற்றும் அமைச்சர்கள் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளனர். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பைடனின் பிரசார குழுவில் மாலா, மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றியதுடன், ஜில் பைடனின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர், பைடன் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும், கல்வி மையத்திற்கான இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில், கல்வி மற்றும் கலாசாரம் தொடர்பான குழுவில் துணை செயலராகவும், சர்வதேச பெண்கள் தொடர்பான அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் குழு தலைவராகவும், பணியாற்றியுள்ளார். நீதித்துறையில் அட்டர்னியாகவும் இருந்துள்ளார்.

அரசு பணியில் சேர்வதற்கு முன்னர், ஒபாமா பிரசார குழுவில் இரண்டு ஆண்டுகள் மாலா பணியாற்றியுள்ளார். சிகாகா சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். மினிசோட்டா பல்கலையில் எம்பிஎச் பட்டம் பெற்றுள்ள அவர், கிரினல் கல்லூரியில் பிஏ ஸ்பானிஸ் முடித்துள்ளார்.

மாலா அடிகாவின் முன்னோர்கள், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், குந்தபூர் தாலுகாவில் உள்ள ககுஞ்சே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மாலா, கர்நாடக வங்கி நிறுவனர் சூரியநாராயணா அடிகா மற்றும் 2008 ல் புக்கர் பரிசு வென்ற அர்விந்த் அடிகா ஆகியோரின் உறவினர் ஆவார்

dinamalar