தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்

லாகூர் : – “இம்ரான் கானுக்கு தைரியம் இருந்தால், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்கும் உளவுத்துறைக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என, மரியம் நவாஸ் சவால் விடுத்துள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் ஆட்சி நடக்கிறது. உரையாடல் : இங்கு, அரசுக்கு எதிராக, பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்கிடையே, பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் என்ன செய்தாலும், அது, பாக்., உளவுத் துறைக்கும், புலனாய்வுப் பிரிவுக்கும் தெரிந்துவிடும். நான், தொலைபேசியில், யாருடன் பேசுகிறேன்; என்ன பேசுகிறேன் என, அனைத்தையும், அவர்கள் நன்கு அறிவர். உலகம் முழுதும், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. அமெரிக்காவிலும், சி.ஐ.ஏ., எனப்படும் மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகளால், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. அதேதான், இங்கும் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

எதிர்ப்பு : இந்நிலையில், இம்ரான் கானின் அந்த அறிக்கையை வைத்து, பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சி, நேற்று கடுமையாக அவரை விமர்சித்தது. கட்சியின் துணை தலைவரும், நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ், நேற்று கூறியதாவது : தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும், பாக்., உளவுத் துறையை கேள்வி கேட்கும் தைரியம் கூட, இந்த கைப்பாவை பிரதமர் இம்ரானுக்கு இல்லை. பிரதமரின் கீழ் இயங்கும் அந்த துறைக்கு, தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்பது வேலை இல்லை என்பதை, இம்ரான் கான் உணர்த்த வேண்டும். பிரதமர் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்களை, உளவுத் துறை ஒட்டு கேட்பது, எனக்கு புதிய செய்தி அல்ல. இதற்கு முன்பே, இது நன்றாக தெரியும். இம்ரான் கானுக்கு தைரியம் இருந்தால், இந்த விவகாரத்தில் உளவுத்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்

dinamalar