100 சதவீதம் செயல் திறனுடைய கொரோனா தடுப்பூசி தயார் – மார்டனா நிறுவனம் அறிவிப்பு

100 சதவீதம் செயல் திறனுடைய கொரோனா தடுப்பூசி தயார் என்று அமெரிக்காவின் மார்டனா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,  கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

அந்த வகையில் அமெரிக்காவின் மார்டனா என்ற மருந்து நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.

இந்த நிலையில், தங்களது தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள நபர்களிடம் 100 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மார்டனா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மார்டனா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தால் ஜாக்ஸ் கூறுகையில் “எங்களிடம் மிகவும் பயனுள்ள ஒரு தடுப்பூசி இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதை நிரூபிப்பதற்கான தரவு இப்போது எங்களிடம் உள்ளது. இந்த தொற்று நோயை திருப்புவதில் எங்கள் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

இதையடுத்து தங்களது தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதியளிக்குமாறு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடமும் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத்துறையிடமும் மாடர்னா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

ஏற்கனவே ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ள அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தங்களது தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என அறிவித்து அதை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

dailythanthi