வலுக்கட்டாயமாக மலேசியா  பின்நோக்கிப் பயணிக்கிறது!

இராகவன் கருப்பையா-உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஒரு புறமிருக்க, பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வளப்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் போட்டா போட்டியிட்டு பயணித்துக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விடுத்து ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கூட சிங்கப்பூர், வியட்நாம் முதலிய நாடுகளின் செயல்பாடுகள் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாலிகையை விட்டு வெளியேற மறுத்து முறண்பிடித்துக்கோண்டிருக்கிற போதிலும் அடுத்த அதிபர் பைடன் தகுதி படைத்த சிறந்த வல்லுனர்களை தேர்வு செய்து தமது அமைச்சரவைக்கு உருவம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.

அதே போல அண்மையில் பொதுத் தேர்தலை முடித்துக்கொண்ட அண்டை நாடான சிங்கப்பூரும் கூட தகுதி பெற்ற சிறந்த கல்விமான்களைக்கொண்டு அரசாங்கத்தை அமைத்து வெற்றிப்பாதையில் பீடுநடை போடுகிறது.

ஆனால் மலேசியாவில் நடப்பதென்ன?

கடந்த மார்ச் மாதத்தில் அவசர அவசரமாக ஆட்சியமைத்த பிரதமர் முஹிடின் உண்மையிலேயே தகுதியானவர்களைதான் தேர்வு செய்தாரா என்றதொரு ஐயப்பாடு இப்போது எல்லாருடைய மனதிலும் அலைபாயத் தொடங்கிவிட்டது.

அண்மைய காலமாக சில அமைச்சர்களும் துணையமைச்சர்களும் வெளியிடும் கருத்துகளைப் பார்த்தால் இவர்கள் வாய்திறக்காமல் இருந்தாலே நல்லது என்று எண்ணத் தோன்றுகிறது.

சில வேளைகளில் பள்ளிப்பிள்ளைகள் கூட எள்ளி நகையாடுவார்கள் போல் தெரிகிறது இவர்களுடைய கோமாளித்தனமான நடவடிக்கைகளைப் பார்த்து.

நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது வீட்டில் ‘டோரெமோன்’ வேடம், ‘டிக் டொக்’ போட்டி, வெளிநாடு சென்று திரும்பிய அமைச்சர் தனிமைப்படுத்திக்கொள்ளாதது மற்றும் கோறனி நச்சிலைக் கொள்ள வெந்நீர், போன்ற அறிவிலித்தனமான யோசனைகளினால் ஏற்கெனவே சினமடைந்துள்ள பொது மக்கள் தற்போது மேலும் பல முட்டாள்தனமான செயல்பாடுகளை ஜீரணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த பல மாதங்களாக பள்ளிகளில் பகடி வதை சம்பவங்கள் குறைந்துள்ளதென பெருமையாக மார்தட்டிக்கொண்ட கல்வியமைச்சருக்கு, நீண்ட நாட்களாக பள்ளிகளே மூடித்தான் கிடக்கின்றன என்று பொது மக்கள் ஞாபகப்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டதை நாம் இன்னும் மறக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, சிரமப்படும் மக்களுக்கு புதிய நோட்டுகளை நிறைய அச்சடித்து பட்டுவாடா செய்ய வேண்டும் என்று யோசனைக் கூறிய விளையாட்டுத் துறை துணையமைச்சர் பலரின் கண்டனத்திற்குள்ளானார்.

தொற்று நோயை காரணம் காட்டி நாடாளுமன்ற நடைமுறைகளில் புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் கூட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி எல்லாரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மொத்தம் 222 உறுப்பினர்கள் அமர வேண்டிய அவையில் 80 பேருக்கு மட்டுமே இடம் என்பதோடு, மிக முக்கியமான விசயமான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்கு ஒவ்வொரு அமைச்சுக்கும் விவாத நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும்தான் என்பதே வேடிக்கை. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் 4 மணி நேரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றம் கூடும். சுருங்கக் கூறின், ‘குயிலைப்பிடித்து கூண்டிலடைத்து கூவச் சொல்லுகிற’ மாதிரிதான் உள்ளது அரசாங்கத்தின் போக்கு.

இத்தகைய அசட்டுத்தனமான விதிமுறைகளினால் சினமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக எதிர் கட்சியினர், முஹிடினின் பிரதமர் பதவியைக் காப்பாற்றுவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது என்று சாடுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

ஏனென்றால் முஹிடினுக்கு எதிராக மொத்தம் 25 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ள போதிலும் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படாத சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே அரசாங்கத்தில் உள்ள பாஸ் கட்சியினரும் தங்களுடைய மதவாத சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர்.

இஸ்லாம் மதம் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ சமயம் என்பதால் கெடா மாநிலத்தில் இந்து ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என மாநில மந்திரி பெசார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி இந்துக்களின் வீட்டு வாசலில் அமைக்கப்பட்டுள்ள சாமி மேடைகளையும் அகற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.

இத்தகைய தீவிர மதவாதத் தொற்று அடுத்தடுத்த மாநிலங்களுக்கு பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Do not drink and drive! Cropped image of man showing stop gesture and refusing to drink beer. Car keys lying near

இந்நிலையில் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள மளிகைக்கடைகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அதன் அமைச்சர் ஒரு திடீர் அறிவிப்பை செய்துள்ளார்.

இத்தகைய விதிமுறை நாடு முழுமைக்கும் அமல் செய்யப்படக்கூடும் என பாஸ் கட்சியின் துணையமைச்சர் ஒருவர் செய்துள்ள அறிவிப்பு இத்துறையில் உள்ள வணிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

அர்த்தமற்ற, தேவையில்லாத, ஆய்வு செய்யப்படாத இதுபோன்ற விதிமுறைகளினால் அரசாங்கத்திற்கு சேர வேண்டிய  வரிப்பணமும் குறைய வாய்ப்பிருக்கிறது என்பதனை நாம் மறுக்க முடியாது.

மலாய்க்காரர் அல்லாதாரின் உரிமைகளை அநாவசியமாகப் பறிக்கக் கூடாது என முன்னாள் ராணுவ அதிகாரிகளின் சங்கம் கூட கண்டனம் தெரிவித்திருந்தது.

உலகின் முன்னணி இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு சிற்றரசுகளில் கூட அண்மையில் மதுபானம் தொடர்பான பல விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே ‘தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை’ போல நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு நிறையவே வேலைகள் செய்ய வேண்டிய நிலையில் இதுபோன்ற பலதரப்பட்ட குளறுபடிகள் நாட்டின் பின்னடைவுக்குத்தான் வழிவகுக்கும்.