இந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை – அகந்தையை காட்டுகிறது.

கெடா, கோலக் கெடாவில் ஒரு இந்து  ஆலயம் உடைத்தது மீதான சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய முக்கியப் பதவியில் உள்ள கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசி, நாட்டில் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாணியில் கருத்துரைப்பது கண்டிக்கத் தக்கது, அவரின் கருத்து, அவர் வகிக்கும் பொறுப்பான பதவியைக் கேவலப் படுத்துவதாக இருக்கிறது, என்கிறார் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார்.

மேலும் தனது பத்திரிக்கை செய்தியில், ஆலயங்களை உடைத்து, சிறுபான்மை மக்களைச் சிறுமைப் படுத்திய அநாகரீகச் செயலுக்கு வெட்கப் படவேண்டிய கெடா மாநில மந்திரி மக்களுக்குச் சரியான விளக்கம் அளிக்காமல், அவரின் அடாத செயலைக் கண்டித்தவர்களைக் கீழ்தனமாக விமர்சித்திருப்பது அவரின் பக்குவமின்மையைக் காட்டுகிறது, என்கிறார் சேவியர்.

“கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசியின் கூட்டணி அரசாங்கமே, தேசிய அளவிலும் ஆட்சியிலிருப்பதால், மற்றச் சமயங்கள் மீது, கெடா மாநில அரசு காட்டும் வெறுப்புணர்வு மத்திய அரசின் அணுகு முறையின் பிரதிபலிப்பாகவே பார்க்கப் படுகிறது. அதனால், இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் மொகிதீன் யாசினும், பாஸ் கட்சியின் தேசிய நிலை தலைவர்களும் கெடா மந்திரி புசாருக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும்.”

அவர்கள் அமைதியாக இருப்பது, கெடா மாநில அரசின் கொள்கையை மத்திய அரசின் தலைவர்களும் ஆமோதிப்பதாகத் தெரிகிறது. இவ்விவகாரத்தில் நாம் அதிகச் உணர்ச்சி வசப்படுவதை விட, இந்நாட்டில் அதிக சாதுரியமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான சேவியர்.

“இந்நாட்டில் இந்தியச் சமுதாயம் அதிகப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஒரு சமூகமாக உள்ளது, இச்சமுதாயம் எந்த இயக்கத்திலும் வெறும் பார்வையாளர்களாக இருந்தால் போதும், சில நியமனப் பதவிகள் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.  நாம் நமது பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கான, உரிமைகளைத் தற்காக்க போராட வேண்டும், அதற்குக் குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”

அதைச் செய்யத் தவறினால், நம் சமுகத்தின் எதிர்காலம் மிக விபரீதமாக இருக்கும் என்பதை உணர்த்துவதாகக் கெடா மாநிலச் சம்பவங்கள் உள்ளன.  இனி இதை மனதில் கொண்டு நாம் அனைவரும் செயல் படவேண்டும் என்றார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவரும் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.