பாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்: திருமணத்திற்கு மறுத்த கிறிஸ்தவ இளம்பெண் சுட்டு கொலை

பாகிஸ்தானில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கிறிஸ்தவ பெண் சுட்டு கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ராவல்பிண்டி, பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினராக உள்ள பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது.

ஆளும் கட்சியின் பிரதமர் இம்ரான் கான், இந்து சிறுமிகளின் கட்டாய மதமாற்றங்கள் மற்றும் கட்டாய திருமணங்கள் ஆகியவை தடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன.

இதேபோன்று, பாகிஸ்தானில் சிறுமிகளை கடத்தி திருமணம் செய்வதும், மதமாற்றத்தில் ஈடுபடுத்துவது போன்ற அவலங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பாகிஸ்தானில் கடந்த செப்டம்பரில் ஹசன் அப்துல் சிட்டியில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவரான பிரீத்தம் சிங் என்பவரது மகள் புல்பால் கவுர் (வயது 17) திடீரென காணாமல் போனார்.

இதுபற்றி டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியிடம் பிரீத்தம் புகார் தெரிவித்து உள்ளார்.  இந்த விவகாரம் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் அந்த அமைப்பு தெரிவித்தது.  இந்த நிலையில் சீக்கிய கமிட்டியானது, அந்த இளம்பெண் கடத்தப்பட்டு, இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு விட்டார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

இதேபோன்று, கடந்த நவம்பரில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வரும் அலி அசார் (வயது 44) என்பவர், அர்ஜூ ராஜா என்ற 13 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, ஆவணங்களிலும் மாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார்.

இதற்காக மதரசா ஜமியா இஸ்லாமியாவில் இருந்து பெற்ற மதமாற்ற சான்றிதழும், அர்ஜூ பாத்திமா என்ற புதிய பெயருடன் திருமண சான்றிதழும் கொண்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.  நீதிமன்ற வளாகத்தில் வைத்து தனது தாய் ரீட்டாவை சந்திக்க விடாமல் சிறுமியை அலி அசார் தடுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் 12 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று 45 வயது நபர் ஒருவருக்கு திருமணம் முடிக்க முயன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

அந்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.  6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்த வழக்கில் குற்றவாளி தப்பியோடி விட்டார்.  சிறுமியின் வயது 17 என தவறாக காட்டப்பட்டு இருப்பது விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளி மீது நடவடிக்கை கோரி உயரதிகாரிகளிடம் சிறுமியின் தந்தை முறையிட்டார்.  எனினும், காவல் துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.  அந்நாட்டில் இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் கடத்தல், சித்ரவதை செய்தல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் மற்றும் திருமணம் செய்தல் ஆகியவற்றுக்கு 28 கிறிஸ்தவ பெண்கள் பாதிப்படைந்து உள்ளனர் என சிறுபான்மையின மக்களுக்கு உதவி வழங்கும் கிறிஸ்தவ கூட்டமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

சமீப மாதங்களில் அந்நாட்டில் கிறிஸ்தவ பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் அதிகரித்துள்ளன.  அவர்களை கடத்தி செல்லுதல், பாலியல் வன்கொடுமை செய்தல் போன்றவை நடைபெறுகிறது.  அதனுடன் கடத்தலில் ஈடுபடும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து உள்ளது.

கடத்தப்படும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றி விடுகின்றனர்.  இதனால் பாகிஸ்தானிய சட்டப்படி அவர்களை திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி எளிதில் கிடைத்து விடுகிறது.  இதனை கடத்தல்காரர்கள் தங்களுக்கு ஏதுவாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் பழைய விமானநிலையம் பகுதியில் சோனியா என்ற கிறிஸ்தவ இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இதே பகுதியை சேர்ந்த ஷெஷாத் என்ற முஸ்லிம் நபர் சோனியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பி தனது தாயாரை அவரது பெற்றோரிடம் அனுப்பி உள்ளார்.  ஆனால் சோனியாவின் பெற்றோர் இதனை ஏற்க மறுத்து விட்டதுடன், தங்களது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க உள்ளோம் என கூறி விட்டனர்.

இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து உள்ளார்.  இந்த நிலையில் நெடுஞ்சாலை ஒன்றில் தனது வருங்கால கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த சோனியா மீது திடீரென ஷெஷாத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதன்பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடி விட்டார்.  இந்த தாக்குதலில் சோனியா உயிரிழந்து விட்டார்.  இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் பைஜன் என்ற நபரை கைது செய்துள்ளனர்.  முக்கிய குற்றவாளியான ஷெஷாத் போலீசாரிடம் சிக்காமல் உள்ளார்.  அவரை தேடும் பணி நடந்து வருகிறது

dailythanthi