ஜுரைடா : ஹைலெண்ட் டவர்ஸ் தளத்தில் நினைவுச்சின்னம் எழுப்ப அரசு திட்டமிட்டுள்ளது

கடந்த 27 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், இடிந்து விழுந்த ஹைலேண்ட் டவர்ஸ் கொண்டோமினிய இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

1993-ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி, 48 குடியிருப்பாளர்களைக் கொன்ற சோகமான சம்பவத்தை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம், பூங்கா மற்றும் நடைப்பாடைகளுடன் நிறுவப்படும் என்று அதன் அமைச்சர் ஜுரைடா கமருதீன் தெரிவித்தார்.

“நான் பூங்கா என்று கூறும்போது (முன்பு அறிவித்தபடி), இது விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளுடன் கூடிய திறந்தவெளி பகுதியாக மாறும் என்ற தவறான எண்ணத்தை மக்கள் பெற்றிருக்கலாம்.

“(உண்மையில்) இது ஒரு பொழுதுபோக்கு பூங்கா அல்ல, அதற்கு பதிலாக நாம் உருவாக்க விரும்புவது ஒரு சிறிய பூங்கா மற்றும் நடை பாதையால் சூழப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்,” என்று பெர்னாமா டிவியின் “ருவாங் பிச்சாரா” நிழ்ச்சியில் விருந்தினராக நேற்று இரவு கலந்துகொண்ட அவர் கூறினார்.

அதற்கான திட்டம் இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், சிலாங்கூர் அரசாங்கத்திடம் நிலம் கையகப்படுத்த RM8.9 மில்லியன் ஒதுக்கீடு செய்ய ஒப்புதலுக்காக அமைச்சு காத்திருப்பதாகவும், இது இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஜுரைடா கூறினார்.

காண்டோமினியம் யூனிட் உரிமையாளர்களிடமிருந்து ஒரு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான செயல்முறைகளும் நிறைவடைந்துள்ளன, இடமாற்றம் மற்றும் துப்புரவுப் பணிகள் நிதி அமைச்சால் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

டிசம்பர் 11, 1993 அன்று, உலு கிள்ளான், தாமான் ஹில்வியூவில் அமைந்திருந்த மூன்று ஹைலேண்ட் டவர்ஸ் காண்டோமினியத் தொகுதிகள் சரிந்து விழுந்ததில், 48 பேர் கொல்லப்பட்டனர்.

2019 ஜூன் மாதத்திற்குள், ஹைலேண்ட் டவர்ஸ் கட்டிடம் இடிக்கப்படும் என்று ஜுரைடா முன்னர் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் கட்டிட உரிமையாளரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை காரணமாக இது தாமதமாகி வருகிறது.

  • பெர்னாமா