ஆய்வு: நஜிப்பையும் பிஎன்-னையும் சிறுபான்மையினர் சாதகமாக பார்க்கின்றனர்

மலேசியாவில் வாழ்கின்ற ஆறு சிறுபான்மை இனங்களான- இந்திய முஸ்லிம்கள், போர்த்துக்கீசியர்கள், பாபா நோன்யா. ஒராங் அஸ்லி, சயாமியர்கள், சிட்டி ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரது அணுகுமுறையையும் சாதகமாக பார்க்கின்றனர்.

மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனுக்குல ஆய்வியல் வல்லுநர் டாக்டர் சார்ஜித் சிங் கில் மேற்கொண்ட ஆய்வு அதனைக் காட்டுகின்றது. சிறுபான்மை இனங்களுடைய அரசியல் அறிவு, அரசியல் ஈடுபாடு பற்றி மதிப்பீடு செய்வதற்காக அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆறு சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள்  நாட்டின் மொத்தம் 28 மில்லியன் மக்கள் தொகையில் எட்டு விழுக்காட்டைப் பிரதிநிதிக்கின்றனர். முக்கிய அரசியல் நீரோட்டத்தில் அவர்கள் தீவிரமாக பங்கு கொள்ளாவிட்டாலும் நாட்டின் அரசியல் நிகழ்வுகளை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட், டிஏபி தலைவர் கர்பால் சிங், மசீச தலைவர் சுவா சொய் லெக், மஇகா தலைவர் ஜி பழனிவேல் ஆகியோருடன் ஒப்பிடுகையில் பிரதமர் பதவிக்கு நஜிப்-பே சிறந்த தேர்வு என பேட்டி காணப்பட்டவர்களில் 54.2 விழுக்காட்டினர் கூறினர்.

மொத்தம் பேட்டி காணப்பட்ட 850 பேரில் சராசரி 82 விழுக்காட்டினர் வரும் தேர்தலில் ஆளும் பாரிசான் நேசனலுக்கு வாக்களிப்பர் என்னும் தகவலையும் சார்ஜித் மேற்கொண்ட ஆய்வு காட்டியது. என்றாலும் பாபா நோன்யா மக்களில் கணிசமான பகுதியினர் பிகேஆர்- கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர்.

“13வது பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களுடைய வாக்குகள் முக்கியமானவை. காரணம் பேட்டி காணப்பட்டவர்களில் 66.5 விழுக்காட்டினர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள். அத்துடன் அவர்களில் 53.1 விழுக்காட்டினர் கடந்த தேர்தலிலும் வாக்களித்துள்ளனர்,” என சார்ஜித் குறிப்பிட்டார்.

2008 பொதுத் தேர்தலில் பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்திக்கும் வரையில் நாட்டின் அரசியல் வடிவமைப்பில் அங்கீகரிக்கப்படாமல் இருந்தனர் என்றும் அவர் சொன்னார்.

அந்த ஆய்வு முடிவுகள் நஜிப்புக்கும் பிஎன்னுக்கும் நல்ல சகுனங்களாகத் தெரிகின்றன. மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சையட் அராபி ஐடிட் பெரிய வம்சாவளிப் பிரிவுகளைச் சார்ந்த வாக்காளர்களிடம் கடந்த மாதம் ஆய்வு நடத்தினார். 2009ம் ஆண்டுக்குப் பின்னர் நஜிப் செல்வாக்கு அதிகாரித்து வருவதை அதுவும் காட்டியது.

சார்ஜித் 17 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட சிறுபான்மை இளைஞர்கள் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார்.

அவருடைய கள ஆய்வு 2011ம் ஆண்டு ஜுன் முதல் ஜுலை மாதம் வரையில் நடத்தப்பட்டது.