“சாமிவேலு புதல்வர் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுவார்”

மஇகா-வின் எஸ் வேள்பாரி, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடும். 2008ம் ஆண்டு அந்த தொகுதியில் அவரது தந்தை எஸ் சாமிவேலு தோல்வி கண்டார்.

அரசியலுக்குப் புதுமுகம் எனக் கருதப்படும் வேள்பாரியுடன் முதன் முறையாக மஇகா மத்தியச்  செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 41 வயது ஏ சக்திவேல், 35 வயது எம் மோகனா, 48 வயது எம் மது மாரிமுத்து, முன்னாள் செனட்டர் என் ரவிச்சந்திரன், முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன் ஆகியோரையும் மஇகா தேர்தல் களத்தில் இறக்கலாம் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு கூறியது.

நடப்பு மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி மோகனும் வேட்பாளராக இருக்கக் கூடிய மற்றவர்களில் அடங்குவர்.

மஇகா உள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தியை வெளியிட்டுள்ள அந்த ஆங்கில நாளேடு, அந்தக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த முதலாவது கட்சித் தலைவருமான விடி சம்பந்தனுடைய பிறந்த இடமாக இருப்பதால் சுங்கை சிப்புட் தொகுதி அந்தக் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனக் கூறியது. ஆகவே அங்கு வலுவான நபர் ஒருவரை நிறுத்த கட்சி எண்ணம் கொண்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அந்தத் தொகுதியில் அவருக்கு பின்னர் எஸ் சாமிவேலு 2008ம் ஆண்டு வரை எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

2008ம் ஆண்டு மஇகாவை விட்டு விலகிய வினேஸ்வரன் கோத்தா ராஜா எம்பி-யாக இரண்டு தவணைக் காலத்துக்கு பணியாற்றியுள்ளார். 2008 தேர்தலில் அவர் தோல்வி கண்டார்.

“இப்போது வாக்காளர் சிந்தனை மாறியுள்ளது. மக்கள் தங்களுக்குச் செவை செய்யக் கூடிய வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்,” என கட்சி வட்டாரம் ஒன்று கூறியதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

மோகனுக்குக் கட்சித் தலைவர் ஜி பழனிவேலுடன் பிரச்னைகள் இருந்தாலும் அவர் ஒரு சொத்து என கருதப்படுகிறார். அதனால் அவரும் அடுத்த தேர்தலில் போட்டியிடக் கூடும்.

“என்ன நேர்ந்தாலும் பழனிவேல் மோகனை ஒதுக்க முடியாது. ஏனெனில் அவர் கட்சி ஊழியர். அவருடைய கடுமையான உழைப்பை உறுப்பினர்களும் மக்களும் அறிவர்,” என இளைஞர் தலைவர் ஒருவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

TAGS: