2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா!

இராகவன் கருப்பையா – 2020ஆம் ஆண்டு ஒரு நிறைவுக்கு வந்துள்ள நிலையில் உலகிலுள்ள கிட்டதட்ட எல்லா நாடுகளிலுமே கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டங்களைத் தவிரத் திரும்பிப் பார்ப்பதற்குப் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க விசயங்கள் வேறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

அனைத்துலக ரீதியில் பார்க்கப்போனால் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலும் அதில் தோல்வியுற்ற நடப்பு அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாலிகையை விட்டு  வெளியேறாமல் அடம்பிடித்துவருவதும் முக்கிய செய்திகளாக இடம்பெற்றன.

மேலும் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார் குடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ் முதல் பெண் துணை அதிபர் மட்டுமின்றி தெற்கு ஆசியாவைச் சேர்ந்த முதல் அமெரிக்கத் தலைவர் என்ற வகையில் உலகளவில் அதிகம் பேசப்பட்டார்.

நம் நாட்டை பொறுத்த வரையில் இந்த தொற்று நோய் 2ஆவது அலையைக் கடந்து கட்டுக்கடங்காமல் பரவிவரும் போதிலும் மேகா தொடரைப் போல அரங்கேறி வரும் அரசியல் நாடகம்தான் பிரதான செய்தியாக அன்றாடம் இருந்து வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் புறவழியாக ஆட்சியைக் கைப்பற்றிய பிரதமர் முஹிடின் அதனைத் தக்கவைப்பதற்குத் தினந்தோறும் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் மிகப் பெரிய ஒரு அமைச்சரவையை அறிவித்த அவர் 3 வாரங்களிலேயே அம்னோவின் நெருக்குதலுக்கு ஆளானது எல்லாரது கவனத்தையும் ஈர்த்தது.

ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை அநியாயமாகக் கவிழ்த்த அரசியல்வாதிகள் மீது மிகுந்த சினமடைந்துள்ள பொது மக்கள், கொஞ்சமும் தகுதியில்லாத பல அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் கோமாளித்தனமான செயல்பாடுகளினாலும் அறிக்கைகளினாலும் வெறுப்படைந்தனர்.

கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார நிறுவனமே தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில், வெந்நீர் அருந்தினால் குணமடைந்து விடும் என்று அதிரடியாகச் செய்த ஒரு அறிவிப்பின் வழி நமது சுகாதார அமைச்சர் அடாம் பாபா உள்நாட்டில் மட்டுமின்றி உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து கேலிக்கூத்துக்கு உள்ளானார்.

ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நோய்க்கு எதிரான நடவடிக்கைகளின் அமலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பில் நிறையவே குளறுபடிகள்.

நாட்டின் பல இடங்களில் அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிப் பொருட்களின் பொட்டலங்கள் மீது சில அரசியல்வாதிகள் தங்களுடைய உருவப்படங்களை அச்சடித்திருந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதற்கிடையே பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகாதீர் ‘பெஜுவாங்’ எனும் புதிய கட்சியைத் தொடக்கினார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக்கும் மகாதீரிடம் இருந்து பிரிந்து ‘மூடா’ எனும் மற்றொரு கட்சியைத் தொடக்கியுள்ளார். எக்காரணத்தைக்கொண்டும் அன்வார் பிரதமராகிவிடக்கூடாது எனும் மகாதீரின் நிலைப்பாடும் ஏறக்குறைய அம்பலமானது.

அம்னோவைச் சேர்ந்த அப்துல் அஸிஸ், புங் மொக்தார் மற்றும் தாஜுடின் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் தரங்கெட்ட முறையில் நடந்து கொண்டதும் எல்லாருடைய கவனத்தையும் திருப்பியது.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நோய்த் தொற்று குறைந்துகொண்டிருந்த வேளையில்தான் சபா மாநிலத் தேர்தல் நாட்டை மீண்டும் புறட்டிப் போட்டது.

இதற்கிடையே எண்ணிலடங்கா ஊழல் குற்றங்களுக்காக 12 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னால் பிரதமர் நஜிப் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துவிட்டு நாட்டின் முதல்நிலை பிரமுகரைப் போல இன்னமும் அறிக்கை விட்டுக்கொண்டு சுதந்திரமாக வலம் வருவதும் ஒரு அனைத்துலக செய்திதான்.

ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மூலத் தொழில் அமைச்சர் கைருடின் 14 நாள்களுக்குத் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் நாட்டை வலம் வந்ததையும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தடுமாறிய முஹிடினையும் சமூக வலைத்தளங்களில் பொது மக்கள் மிகக் கடுமையாக விமர்சித்ததும் வரலாறு.

செப்டம்பர் மாதத்தில் அன்வார் செய்த ஒர் திடீர் அறிவிப்புதான் இதற்கெல்லாம் உச்சமாக அமைந்தது.

ஆட்சியமைக்க தம்மிடம் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் முஹிடின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும் அவர் செய்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தருணத்தில் பதற்றத்திற்குள்ளான முஹிடின் நோய்த் தொற்றைக் காரணம் காட்டி நாட்டில் அவசரக் காலத்தை பிரகடனப்படுத்த முயன்றார்.

எனினும் இவ்விருவருடைய சுயநல முயற்சிகளும் கடைசியில் புஸ் வானமானதும் நமக்குத் தெரியும்.

இதற்கிடையே கிடுகிடு வேகத்தில் பரவிவரும் நோய்த் தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆக்க கரமாக இருப்பதாகத் தெரியவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தீவிரமடைந்து வரும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் கொரோனாவுக்கு எதிரான போர் புறம் தள்ளப்பட்டுள்ளதாகவேத் தெரிகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற மக்களவைக் கூட்டமும் மிகவும் பரபரப்பு நிறைந்த ஒன்றுதான்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிராகரிக்கப்பட்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கிடையே அந்த கூட்டத் தொடர் ஒரு நிறைவுக்கு வந்தது.

ஆகக் கடைசியாக பொது மக்களின் கவனத்தை ஈர்த்த சம்பவம் அறிவியல், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் சைக்கிளில் இருந்து விழுந்ததுதான்.

மோசமான பராமரிப்பினால் சாலைகளில் ஏற்படும் குழிகளில் விபத்துக்குள்ளாகிக் கணக்கிலடங்கா மோட்டார் சைக்கிலோட்டிகள் மரணமடைந்துள்ளனர். நிறைய வாகனங்களின் உருளிப்பட்டைகளும் ரிம்களும் பழுதடைந்துள்ளன.

ஆனால் சைக்கிளில் இருந்து விழுந்த கைரியிடம் மட்டும் பொதுப்பணி இலாகா மன்னிப்பு கோரியது மக்களிடையே பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.

ஆக ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி 2,525 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உச்சத்தைத் தொட்ட நோயின் தீவிரம் நாட்டின் அரசியல்வாதிகளுடனான பந்தயத்தில் தோல்வியடைந்துவிட்டது என்றுதான்  சொல்லவேண்டும்!