அடுத்த ஆண்டு அரசாங்க ஊழியர் எண்ணிக்கையை 29,000 குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது பாரிசான் நேசனல் அரசாங்கமே தவிர எதிர்க்கட்சிகள் அல்ல என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.
மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் “அரசாங்கச் சேவையை பாதியாகக் குறைக்க” எதிர்க்கட்சிகள் விரும்புவதாக அண்மையில் பெக்கிடா எனப்படும் மலேசிய இஸ்லாமிய பிரச்சார, நலன் சங்கத்தின் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றம் சாட்டியதற்கு புவா பதில் அளித்தார்.
“நஜிப் மிகவும் உயர்ந்த நிலையிலான கபட வேடதாரி என நஜிப் தம்மை மெய்பித்துக் கொண்டுள்ளார். நஜிப் உரையாற்றியதற்கு இரண்டு நாள் கழித்து அரசாங்கச் சேவையில் 29,000 வேலைகள் அதிகமாக இருப்பதாக பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொதுச் சேவைத் துறை அறிவித்துள்ளது,” என புவா சொன்னார்.
“ஆகவே இன்றைய அரசாங்கச் சேவையை களையெடுப்பது அம்னோ ஆகும். ஆனால் அது பக்காத்தான் ராக்யாட்டையும் என்னையும் இனவாதிகள் என துணிச்சலாக சொல்கிறது.”
“நஜிப் அந்த விஷயத்தில் மிகவும் தீவிரமான இனவாதப் போக்கை பின்பற்றியுள்ளார். மற்ற அம்சங்களுடன் அவரது உரை, மலாய்க்காரர்களை மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகத் தூண்டி விடுகிறது. பக்காத்தானை அரசாங்கச் சேவைக்கு எதிர்ப்பாளர்கள் என சித்தரிப்பதின் மூலம் நஜிப்பும் அம்னோ தலைவர்களும் அரசியல் சந்தர்ப்பவாதிகளாக மாறியுள்ளனர்.”
“நஜிப் என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகிறார்”
நஜிப் என்ன விலை கொடுத்தாவது-அப்பட்டமான பொய்களைப் பரப்பினாலும் பரவாயில்லை , தமது ஒரே மலேசியா கொள்கைக்கு மரணச் சான்றிதழை வெளியிட்டாலும் பரவாயில்லை – அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகிறார் என டிஏபி பிரச்சாரப் பிரிவு செயலாளருமான புவா கூறினார்.
அம்னோ தலைவர் என்ற முறையில் ஆற்றிய உரையிலும் அரசாங்க ஊழியர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க எதிர்க்கட்சிகள் எண்ணுவதாக நஜிப் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு அரசாங்க ஊழியர் எண்ணிக்கையை குறைக்க பக்காத்தான் ராக்யாட் எந்த யோசனையையும் முன்வைக்கவில்லை என புவா சொன்னார்.
1,940 ரிங்கிட் பெறும் பைனாகுலர்களை 56,350 ரிங்கிட்டுக்கு வாங்கியவர்களைப் போன்ற கட்டொழுங்கு விதிமுறைகளை மீறியவர்களை நீக்குவது அல்லது முன் கூட்டியே ஒய்வு பெறச் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசாங்க ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு வழியாக பக்காத்தான் ராக்யாட் பரிசீலிக்குமா என ஆய்வரங்கு ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மட்டுமே தாம் பதில் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
“அடுத்தப் பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றுமானால் திறமையாக ஆட்சி புரிவதற்கு அரசாங்கச் சேவையின் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை என்பதால் தீவிரமான நடவடிக்கைகள் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூட நான் வலியுறுத்தினேன்”, என்றார் புவா.
“Saraan Baru Perkhidmatan Awam (SBPA)” என்னும் புதிய அரசாங்கச் சேவை திட்டத்தின் கீழ் தங்களது அடைவு நிலைக்கு 70 புள்ளிகளும் அதற்குக் குறைவாகவும் பெறுகின்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும் என்று நேற்று பொதுச் சேவைத் துறை அறிவித்தது.
அடுத்த ஆறு மாதங்களில் அவர்களுடைய அடைவு நிலையில் முன்னேற்றம் ஏற்படா விட்டால் அந்த அரசு ஊழியர்கள் நீக்கப்படுவர்.