இன்று ஆறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் (பி.கே.பி. 2.0), உணவு சேவை வணிகம் 80 விழுக்காடு குறைந்துள்ளது என்று மலேசிய முஸ்லீம் உணவகத் தொழில்முனைவோர் சங்கம் (பிரெஸ்மா) கூறியுள்ளது.
பிரெஸ்மா தலைவர், ஜவஹர் அலி தைப் கான் கூறுகையில், பி.கே.பி. 2.0 செயல்படுத்தப்படுவதால் உணவக உரிமையாளர்களான, அவரது சங்கத்தின் 4,200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதனைத்தொடர்ந்து, உணவகங்கள் மற்றும் உணவு சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும் என்று ஜவஹர் கேட்டுக்கொண்டார்.
அவற்றில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை ஒரு மேசைக்கு இருவர் என்றும், வியாபார நேரத்தை நீட்டிப்பது ஆகியவையும் அடங்கும்.
“காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையில் என்றுள்ள வியாபார நேரத்தை, இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என பிரெஸ்மா விரும்புகிறார்.
“ஏனென்றால், வேலை மற்றும் இன்னும் பல காரணங்களால் இரவு எட்டு மணிக்குப் பிறகும் பலர் உணவு வாங்க விரும்புகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த நெகிழ்வுத்தன்மை, எஸ்ஓபி-க்கு உட்பட்டது. யாராவது அறிவுறுத்தல்களை மீறினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.