கடிதம் l உண்மையில் நான் அவசரநிலையை ஆதரிப்பேன், மக்களின் வசதிக்காகத் தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனைகளின் சுமையைக் குறைப்பதுவே, நமது பிரதமர் முஹைதீன் யாசினின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், நான் அவசரநிலையை ஆதரிப்பேன், வேலை இழந்த ஒவ்வொரு மலேசியருக்கும், மாதா மாதம் ஒரு நிலையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்து, இதனால் அவர்களது குடும்பங்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டுவதை உறுதிசெய்வதே அவரது நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், நான் அவசரநிலையை ஆதரிப்பேன், கோடீஸ்வரர்களின் சொத்திலிருந்தும் செல்வத்திலிருந்தும் ஒரு பகுதியை எடுத்து (5% எடுத்தால்கூட போதுமானது), ஏழைகளுக்கான வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் வேலைகளைப் பாதுகாப்பதுமே நமது பிரதமரின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், நான் அவசரகாலத்தை ஆதரிப்பேன், தற்போதையப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களின் கடன்களை மீட்க, வங்கிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முடக்குவதே முஹைதீனின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், அவசரநிலையை நான் ஆதரிப்பேன், இணைய அலைவரிசையை, அனைத்து கிராமப்புற மக்களும் தங்குத்தடையின்றி பயன்படுத்துவதை உறுதிசெய்வதே பிரதமரின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், நான் அவசரநிலையை ஆதரிப்பேன், வாடகை செலுத்த முடியாத காரணத்திற்காக, கட்டாய வெளியேற்றத்தை எதிர்நோக்கும் நகரமுன்னோடிகள், விவசாயிகள் மற்றும் வீட்டு வாடகைதாரர்களைப் பாதுகாப்பதே பிரதமரின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், நான் அவசரகாலத்தை ஆதரிப்பேன், பயன்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து ஆடம்பர வீடுகளும் கட்டிடங்களும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க இயலாத அல்லது தனிமைபடுத்துதலுக்குப் போதிய இடமில்லாதப் பொது மக்கள் பயன்படுத்துவதே, பிரதமரின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், அவசரகாலத்தை நான் ஆதரிப்பேன், ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கும் அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களையும் பாதுகாவலர்களையும் நிரந்தர ஊழியர்களாக மாற்றுவதற்கான கட்டளை ஒன்றை நிறைவேற்றுவதே பிரதமரின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், அவசரநிலையை நான் ஆதரிப்பேன், நெரிசலான விடுதிகளில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் கோவிட் -19 தொற்றுக்கு இரையாகாமல் இருக்க, அனைத்து தொழிலாளர் விடுதிகளையும் பழுதுபார்த்து, அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க ஆவனச் செய்வதே பிரதமரின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், நான் அவசரநிலையை ஆதரிப்பேன், ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியருக்கு, அவர்களின் பணி மற்றும் தியாகங்களைப் பாராட்டும் வகையில், அவர்களுக்கு நிரந்தர வேலைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதே பிரதமரின் நோக்கம் என்றிருந்தால்…
உண்மையில், நான் அவசரகாலத்தை ஆதரிப்பேன், இதனைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல், நீர் மற்றும் காற்று மாசுபாட்டிலிருந்து விடுபடுவதை உறுதி செய்யவதே பிரதமரின் நோக்கம் என்றால்…
உண்மையில், நான் அவசரநிலையை ஆதரிப்பேன், அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்த பெரும்பான்மை மக்களைக் காப்பாற்றுவதற்கான அவசரநிலை இதுவென்றால்…. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பாளிகள் அனைவரையும் கோவிட் -19 தொற்றிலிருந்து காப்பாற்றுவதே முஹைதீனின் நோக்கம் என்றால்…
ஆனால், ஒரு தலைவரின் மற்றும் ஒரு கட்சியின் பிழைப்புக்காக மட்டுமே என்றால், நாடாளுமன்ற கூட்டங்களையும் தேர்தல்களையும் ஒத்திவைப்பதை உறுதிசெய்ய மட்டுமே என்றால்…. பிரதமரின் அவசரகால அறிவிப்பின் நோக்கம் இவை மட்டுமே என்றால், நான் அவசரநிலையை ஆதரிக்கமாட்டேன்.
எஸ் அருட்செல்வன் , மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்
தமிழாக்கம் :- சாரணி சூரியமதன்