அவசரகால அமலாக்கத்தை முன்கூட்டியே நிறுத்த முடியுமா என்பதை தீர்மானித்து, மாமன்னருக்குப் பரிந்துரை செய்யும் அவசரகால சுயாதீனக் குழுவை அமைக்க, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களின் பெயர்களைக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமுக்குப் பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனை உறுதிசெய்த, பெயர் குறிப்பிட மறுத்த பிரதமர் துறை அமைச்சரின் அத்தரப்பு, கடிதத்தின் உள்ளடக்கங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
முன்னதாக, மாட்சிமை தங்கியப் பேரரசர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா, கோவிட் -19 தொற்றுநோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு செயலூக்க நடவடிக்கையாக அவசரகாலப் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
“ஆகஸ்ட் 1, 2021 வரை அல்லது அதற்கு முன்னதாக, தினசரி நேர்மறை கோவிட் -19 புள்ளிவிவரங்களைக் கட்டுப்படுத்தவும் திறம்படக் குறைக்கவும் முடியும் என்றால், அவசரகாலக் கட்டத்தைக் குறைக்கவும் மன்னர் ஒப்புதல் அளித்தார்.
“அதனைக் கண்காணித்து, மன்னருக்குப் பரிந்துரைக்க, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சுகாதார மற்றும் அது தொடர்புடைய நிபுணர்களைக் கொண்ட, ஒரு சுயாதீனக் குழுவை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கும் மன்னர் உடன்பட்டார்,” என அரண்மனை பேச்சாளர் ஓர் அறிக்கையில் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் சைபுதீன் நாசுதியோனும் அக்கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.