அறிக்கை : பி.என். அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன

நேற்று வெளியிடப்பட்ட ஒரு சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் (பிஎன்) கீழ், மலேசியாவில் மனித உரிமைகள் குறைந்து வருவதாகக் கூறியுள்ளது.

பேச்சு சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தையும் அரசாங்கம் தீவிரமாக மீறியதாகவும், ஊடகங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

“இந்தக் கூட்டணி அரசாங்கம், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) முன்னெடுத்த மனித உரிமை சீர்திருத்த இயக்கத்தை நிறுத்தியுள்ளது,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (எச்.ஆர்.டபிள்யூ. Human Right Watch (HRW) 2021 அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பிஎன். ஆட்சியைப் பிடித்த விதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியதற்காக செயற்பாட்டாளர் ஃபதியா நத்வா ஃபிக்ரிக்கு எதிராக அதிகாரிகள் தேசத்துரோக விசாரணையைத் தொடங்கியபோது, ​​நாட்டில், பேச்சு சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் அச்சுறுத்தலுக்குள்ளானது,” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

“அப்போதிருந்து, அரசாங்கத்தை விமர்சித்ததற்காக அதிகாரிகள், பல எதிர்க்கட்சி ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது விசாரணையைத் திறந்துவிட்டனர்,” என்று கூறிய எச்.ஆர்.டபிள்யூ., கடந்த மே 11 வரையில், தவறான செய்திகள் மற்றும் தூண்டுதல் குற்றச்சாட்டுகளின் பேரில் இதுவரை 520-க்கும் மேற்பட்ட விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன, கோவிட்-19 தொற்று உட்பட என்றது.

செய்திகளைத் ‘தவறாகப் புகாரளித்த’ ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

சௌத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையாளர், தாஷ்னி சுகுமாரன் மற்றும் கோட் ப்ளூ-இன் சுகாதாரச் செய்தித் தள ஆசிரியர், பூ சூ லின் மீதான விசாரணையையும், மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளையும் அது மேற்கோளிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், புத்தகத்தின் உறை தேசியச் சின்னத்தை ஒத்திருப்பதாகக் கூறி, ‘புதிய மலேசியாவில் மறுபிறப்பு : சீர்திருத்தம், எதிர்ப்பு மற்றும் நம்பிக்கை’ (Rebirth: Reformasi, Resistance and Hope in New Malaysia) என்றப் புத்தகத்தை, அச்சகங்கள் மற்றும் வெளியீட்டுச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சு தடைசெய்தது.

பி.கே.பி.டி.யின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோர் மீது நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பான தனது அறிக்கைக்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் தாஷ்னி விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்குக்கு எதிராக “மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை” என்று அரசாங்கம் தீர்ப்பளித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜொகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான கட்டுரைக்காக, அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் பூ சூ லின் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், மலேசியாகினி செய்தி அறிக்கையில் ஐந்து வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், ‘நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு’ சுமத்தப்பட்டு, ஸ்டீஃபன் விசாரிக்கப்பட்டு வெருகிறார். இந்த நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

“2020-ல், மலேசியா மிகப்பெரிய மனித உரிமை மீறலை அனுபவித்திருக்கிறது. மனித உரிமை சீர்திருத்தத்திற்கான நம்பிக்கைகள், மலேசியாவில் அவ்வளவாக முன்னேற்றம் அடையவோ அல்லது விரைவாக வீழ்ச்சியடையவோ இல்லை,” என்று எச்.ஆர்.டபிள்யூ.-வின், ஆசியத் துணை இயக்குநர் பில் ராபர்ட்சன் கூறினார்.

ஜனவரி 2019-ல், பி.எச். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் மெது வேகத்தில் ராபர்ட்சன் அதிருப்தி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்க நிறுவனங்களைச் சீரமைப்பதோடு, தேசத் துரோகச் சட்டம், குற்றத் தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களை இரத்து செய்வது உள்ளிட்ட பெரிய மாற்றங்களைப் பி.எச். கூட்டணி உறுதியளித்தது. இருப்பினும், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

“கைதிகளுக்கு எதிராக காவல்துறையினர் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது, குற்றத்திற்குப் பொறுப்புக்கூறல் இல்லாதது போன்றவை, ஒரு கடுமையான பிரச்சினையாக இன்னும் தொடர்கிறது,” என்று எச்.ஆர்.டபிள்யூ. தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

எச்.ஆர்.டபிள்யூ.-வின் கூற்றுப்படி, ‘தன்னியலான காவல்துறையினர் நடத்தை ஆணைய’த்தைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது, இது ‘தன்னியலான காவல்துறையினர் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணைய’த்தின் (ஐபிசிஎம்சி) பதிப்பாகும், ஐபிசிஎம்சிக்கு காவல்துறை ஆட்சேபம் தெரிவித்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

“பிரதமர் முஹைதீன் யாசின் மலேசியாவை நஜிப் அரசாங்கத்தின் மோசமான கடந்த காலத்திற்கு இழுக்க விரும்புவதாகத் தெரிகிறது. யாராவது ஒருவர் உணர்ச்சிமிக்க தலைப்புகளில் வெளிப்படையாகப் பேசினால், ​​காவல்துறை உடனடியாக அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டும். அரசாங்கம் இதைச் செய்வதை நிறுத்தி அனைவரின் உரிமைகளையும் முழுமையாக மதிக்க வேண்டும்,” என்றார் ராபர்ட்சன்.

“பெட்பியர் (lesbian), ஆணியர் (gay), இருபான்மி (biseksual) மற்றும் பால்மாற்றி (transgender) போன்ற பான்மியர்களுக்கு (LGBT) எதிரான பாகுபாடு மலேசியாவில் பரவலாக உள்ளது,” என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அதன் கூற்றுப்படி : “ஜூலை மாதம், மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் பால்மாற்றிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத அதிகாரிகளுக்கு ஒரு ‘முழு உரிமத்தை’ வழங்கினார்; கைது அல்லது மதக் கல்வி மூலம் அவர்களைச் ‘சரியான பாதைக்குத்’ திரும்பப் பெற வேண்டும் என்று.”

ஆகஸ்ட் மாதத்தில், ஆர்வலர் நிக்கோல் ஃபோங், இது பான்மியர்களை அவர்கள் உணர்ந்த அசாதாரண பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலையைக் கைவிடச் செய்யும் நோக்கம் கொண்டது என்றார். இதனால், மத அதிகாரிகள் அவருக்கு எதிராக ஒரு போலீஸ் புகாரைப் பதிவு செய்தனர்.

761 பக்கங்கள் கொண்ட, ‘உலக மனித உரிமைகள் கண்காணிப்பு 2021’ அறிக்கை, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமை நடைமுறைகளை மதிப்பாய்வு செய்கிறது.