டாக்டர் எம் : பிரதமர் வேட்பாளராக ஷாஃபியை  டிஏபி விரும்புகிறது

டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங், வாரிசன் தலைவர் ஷாஃபி அப்தாலை எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர் மகாதிர் மொஹமட் கூறினார்.

பி.கே.ஆர். தலைவர் அன்வரால் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை நிரூபிக்க முடிந்தால், அவர் பிரதமர் பதவி ஏற்பதை, தான் “எதிர்க்கவில்லை” என்று மகாதீர் கூறினார்.

இன்று காலை, பி.எஃப்.எம். 89.9 வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில், அன்வர் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்ற கூற்றை மறுத்து, அந்தப் பதவியை அவரிடம் ஒப்படைக்க தான் விரும்புவதாக அம்முன்னாள் பிரதமர் வலியுறுத்தினார்.

“இல்லை, நான் அவரை எதிர்க்கவில்லை, ஆனால் என் பணியை முடிப்பதற்குள் நான் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். நான் இராஜினாமா செய்வேன் என்று அவரிடம் சொன்னேன்.

“உண்மையில், எனக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கச் சொன்னேன், ஏனென்றால் எனக்கு ஒரு பணி இருக்கிறது […],” என்று அவர் கூறினார்.

“ஆம், அவர் பிரதமராக இருப்பார், ஆனால் அவர் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும்.

“என்னால் அதை தீர்மானிக்க முடியாது, ‘நீங்கள் பிரதமர்’ என்று என்னால் கூற முடியாது. பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு உங்களுக்கு இருக்க வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

அன்வரைவிட ஷாஃபி சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று ஏன் நினைத்தார் என்று கேட்டதற்கு, மகாதீர் லிம்-ஐ சுட்டிக்காட்டினார்.

மலாய் வாக்காளர்களை ஈர்க்க பக்காத்தான் ஹராப்பானுக்கு (பி.எச்.) அவர் தேவை என்று நம்புவதாக அவர் கூறினார்.

“இது குவான் எங், டிஏபியின் பார்வை.

“நான் அங்கு (பிரதமராக) இருப்பதை அன்வர் விரும்பவில்லை. ஆனால், நான் அங்கு இல்லாதிருந்தால், மலாய்க்காரர்கள் பி.எச்.-ஐ ஆதரிக்க மாட்டார்கள், மேலும் அவர் பிரதமராக முடியாது,” என்று அவர் கூறினார்.

லிம்-இன் கருத்தறிய, மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டது.

கடந்த ஜூன் மாதம், டிஏபி மற்றும் அமானாவின் உயர்மட்டத் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஷாஃபியை மகாதிர் வெளிப்படையாக ஆதரித்தார்.

அந்த நேரத்தில், டிஏபியும் அமானாவும் இது குறித்து பி.எச். விவாதிக்கும் என்று கூறியிருந்தனர்.

அதேசமயம், அன்வரையேப் பிரதமர் வேட்பாளராக இன்னும் விரும்புவதாக பி.கே.ஆர். வலியுறுத்தியது.

நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் தலைவர்களுடன் பெஜுவாங் ஒத்துழைக்காது

அடுத்தத் தேர்தலில் பெஜுவாங் யாருடன் பணியாற்ற விரும்புகிறது என்று கேட்டதற்கு, மகாதீர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை, ஆனால் அம்னோவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை.

இருப்பினும், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளுடன் பெஜுவாங் ஒத்துழைக்காது என்று மகாதீர் விளக்கினார்.

“அரசாங்கத்தை அமைப்பதற்குப் பிரதான கட்சிகள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், ஏனெனில் தேர்தலில், பெரும்பாலும் இடது மற்றும் வலது, தேசியக் கூட்டணி (பிஎன்) அல்லது பி.எச்., தெளிவான பெரும்பான்மையைப் பெறுவது கடினம்,” என்று அவர் கூறினார்.

“நிச்சயமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நான் ஒத்துழைக்க மாட்டேன். அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் குற்றவாளிகள் என்று மக்களுக்குத் தெரியும்,” என்று மகாதீர் கூறினார்.