நமது கல்விமான்கள் பேசுவதற்கு மிகவும் பயப்படுகிறார்கள்

மலேசியாவின் உயர்நிலை கல்விக் கழகங்களில் ஒன்று கூட பல்கலைக்கழகம் என்றழைப்பதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்று வெளிப்படையாகப் பேசும் கல்விமான் அபு ஹஸ்ஸான் ஹஸ்புல்லா கூறினார்.

பல்கலைக்கழகங்களில் அறிவுக்கூட சுதந்திரம் இன்மை மற்றும் பொதுநல விவகாரங்களில் மௌனம் காத்தல் ஆகியவை குறித்து வருத்தம் தெரிவித்த மலாயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர், நமது கல்விமான்கள் பேசுவதற்கும் மக்களுக்காக சிந்திப்பதற்கும் போதுமான துணிச்சலைக் கொண்டிருக்கவில்லை என்றார்.

“(கிரேக்க தத்துவஞானி) அரிஸ்டோட்டல் பல்கலைக்கழகத்தை உலகத்தின் அனைத்து பிரச்னைகளையும் பகிரங்கமாக விவாதிப்பதற்கான இடம் என்று வர்ணித்துள்ளார். அது தெளிவானதாகும்”, என்று நேற்றிரவு மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த “அறிவுக்கூட சுதந்திரம் மற்றும் பல்கலைக்கழக தன்னாட்சி” என்ற கருத்தரங்களில் அவர் கூறினார்.

பேசுவதற்கு தடை

பொதுநல பிரச்னைகள் குறித்து கல்விமான்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு மலேசிய பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக அபு ஹஸ்ஸான் கூறினார்.

“1995 ஆம் ஆண்டில் மலேசியா மேக மூட்டத்தால் சூழப்பட்டிருந்தபோது அந்தப் பிரச்னை பற்றி பேசுவதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நமது கல்விமான்களுக்கு அனுப்பப்படிருந்தது எனக்கும் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த மேக மூட்டத்தின் காரணமாக யாராவது இறந்திருந்தால், அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்?

“டெங்கி காய்ச்சலால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை மருத்துவர்கள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை என்று ஒரு மருத்துவமனையில் மருத்துவ நிபுணராக இருக்கும் எனது மனைவி கூறியதை நானும் கேட்டுள்ளேன். இது பேரழிவாகும்.”

கல்விமான்கள் என்ற முறையில் அவர்கள் உரக்கவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும். இல்லையேல், அவர்கள் “வகுப்பறைக்கு பாடம் போதிக்க வரும் ஆசிரியர்கள்” மட்டுமே. பல்கலைக்கழகம் கூட ஒரு “பயனற்ற பள்ளிகூடம்” ஆகிவிடும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

“என்னைப் பொறுத்த வரையில் நாம் இன்னும் ஒரு பல்கலைக்கழகத்தைப் பெற்றிருக்கவில்லை. நம்மிடம் ஏராளானமான உயர்நிலைக் கல்வி நிலயங்கள் இருந்தபோதிலும், அவற்றில் ஒன்றுக்கு கூட பல்கலைக்கழக தகுதி இல்லை.”

மூன்றாம் தர பல்கலைக்கழகங்கள்

அபு ஹஸ்ஸானின் கருத்துக்கு இணக்கம் தெரிவித்தார் சகோதர கல்விமான் ரோஸ்லி மகாட். இவர் மலேசிய கல்விமான்கள் இயக்கத்தின் செயலாளராவார்.

“நமது தரம் மூன்றாம் தரமாகும். இங்கு உலகத் தரத்திலான பல்கலைக்கழகங்கள் இல்லை. இதற்கும் பல்கலைக்கழக தர நிர்ணயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை”, என்று அந்த மூத்த விரிவுரையாளர் கூறினார்.

உலகத் தரத்திலான பல்கலைக்கழகம் உயர்க் கல்வி நிலையங்களில் போதிக்கும் ஆசிரியர்களின் தகுதிகள் பற்றி யுனெஸ்கோ வெளியிட்டுள்ள பரிந்துரைகளைக் கண்டிப்பாக அமலாக்க வேண்டும் என்று ரோஸ்லி கூறினார்.

பல்கலைக்கழக தன்னாட்சி, முழுப் பொறுப்புடமை மற்றும் கல்விமான்களின் கடப்பாடுகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

“யுனெஸ்கோ பரிந்துரைகளில் மூன்றை கூட அடைவது மிகக் கடினமாகும் என்று நான் நினைக்கிறேன். கொடுக்கப்படும் தொல்லைகளின் காரணத்தால், நாம் மூன்றாம் தர பல்கலைக்கலைக்கழகங்களாகத்தான் வர முடியும்.”

“யுயுசிஎ அகற்றப்பட வேண்டும்”

நேற்றைய கருத்தரங்கில் சிலாங்கூர் சுல்தான் மீது கருத்து தெரிவித்ததற்காக பல்கலைக்கழக அதிகாரிகளாலும் போலீசாராலும் புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக் சட்டப் பேராசியர் அப்துல் அசிஸ் பாரியும் இருந்தார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் சட்டத்திற்குத் (யுயுசிஎ) திருத்தங்கள் கொண்டுவர அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து கருத்துரைத்த அவர், சர்ச்சைக்குரிய அச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என்றார்.

அச்சட்டம் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்க முடியும். அச்சட்டத்தின் நோக்கம் மாணவர்களை அடக்கி ஆட்கொள்வதுதான். ” அச்சட்டத்தை நீக்குங்கள். அவ்வளவுதான்.”

அச்சட்டத்தை அகற்றாமல் திருத்தம் மட்டும் செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு தந்திரம் என்றாரவர்.

“யுயுசிஎ சட்டத்திற்கு திருத்தம் என்ற அரசாங்கத்தின் தந்திரத்தை நம்பாதீர்கள். அச்சட்டம் ஒரு பேய், அது நோய்த்தன்மை உடையது. அவ்வாறான ஒன்றை முட்டாள்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வர்.”