சேவியர் : தினகரன் குடும்ப நண்பர், உதவியாளர் அல்ல

தனக்கு பழக்கமான பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவர் எம் ஏ தினகரனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்ததைத் தொடர்ந்து, பி.கே.ஆர். துணைத் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்றக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இன்று ஓர் அறிக்கையில், தினகரன் குடும்ப அறிமுகம் என்றும், அவரது உதவியாளர் அல்ல என்றும் முன்னாள் அமைச்சர் சேவியர் தெரிவித்துள்ளார்.

“சமீபத்திய ஊடக அறிக்கையில், எனது பெயர் இணைக்கப்பட்டுள்ளது, இது மக்கள் பிரதிநிதியான எனக்கு எதிராக தப்பெண்ணத்தை எழுப்பியுள்ளது.

“குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில், எனது நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை அழிக்க நான் முன்வந்தேன்,” என்று அவர் கூறினார்.

நேற்று, விளக்கம் அளிக்க எம்.ஏ.சி.சி. அலுவலகம் சென்ற தினகரன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஒரு வாகனத்தைப் பறிமுதல் செய்வதற்காக எம்.ஏ.சி.சி. உறுப்பினர்கள் கிள்ளானில் உள்ள ஜெயக்குமாரின் வீட்டையும் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

பேராக்கில் ஒரு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விசாரணைக்காக தினகரன் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும், இந்தச் செய்தி எழுதப்பட்ட நேரத்தில், எம்.ஏ.சி.சி. உயர் அதிகாரிகளை அணுக முடியவில்லை என்பதால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சேவியர் தனது அறிக்கையில், அமைச்சரின் முக்கியமான முடிவை அமைச்சரவை அங்கீகரிக்க வேண்டும் என்று ஒரு மறைமுகச் செய்தியை வெளியிட்டார்.

“ஓர் அமைச்சினால் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள், அமைச்சரவையில் கூட்டாக அங்கீகரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

விசாரணைக்கு உதவ, தினகரன் ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எஃப்எம்டி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.