ரிம 5 லட்சம் அபராதம் – கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த தண்டனை!

நீதி துறையை விமர்சனம் செய்யும் வகையில் சில வாசகர்களின் கருத்துகளை பதிவு செய்ததிற்காக, மலேசியகிணி ரிம 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கடந்த 9.6.2020-இல் மலேசியகிணியில் வெளியான, “CJ orders all courts to be fully operational from July 1”, என்ற செய்தியின் வாசகர் கருத்து பகுதியில் வெளியான கருத்துகள் நீதித்துறையை அவமதிப்பதாகவும் அதன் மீது தேசநிந்தனை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்யுமாறு அட்டார்னி ஜெனரல் இட்ருஸ் அருண் கூட்டரசு நீதி மன்றத்திடம் விண்ணப்பித்தார்.

இதன் பயனாக மலேசியகிணி மீதும் அதன் ஆசிரியர் ஸ்டீவன் கான் – மீதும் தேசநிந்தனை சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவானது.

அந்த வழக்கின் தீர்ப்பை இன்று 7 கூட்டரசு நீதிபதிகள் அடங்கிய சபை 6-1 என்ற வகையில் மலேசியகிணி ரிம 500,000-ஐ அடுத்த மூன்று நாட்களுக்குள் செலுத்துமாறு தீர்ப்பளித்தது. அந்தச் சபையின் நீதிபதி நளினி பத்மநாதன் மட்டும் மாற்றுத் தீர்ப்பளித்தார்.

“இந்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த பலத்த பின்னடைவு” என்கிறார், மலேசிய கிணியின் ஆசிரியர் ஸ்டீவன் கான். வாசகர்களின்  கருத்தை எங்களின் கருத்தாக கொண்டு, இவ்வளவு அதிகமான தொகையை அபராதமாக விதிப்பது, எங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை முற்றாக அழிப்பதற்கு சமம்” என்கிறார்.

வாசகர்களின் கருத்துகளுக்காக ஒரு தகவல் ஊடகம் தண்டிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.