சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி அடைந்துள்ளார்

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் நேற்று அறிவித்திருந்த ஆலோசனை மன்றம் தேவைக்கு கூடுதலானது என்று இன்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா அறிவித்தார். இது மந்திரி புசாருக்கு ஒரு பேரிடியாகும் என்று கூறப்படுகிறது.

சிலாங்கூர் சுல்தான் அவ்வாறான ஆலோசனை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை என்று சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பானி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தேவாலயத்துடன் நடத்தப்படவிருக்கும் சந்திப்பில் காலிட் மற்றும் மாநில முப்தி தம்யெஸ் அப்துல் வஹாப் ஆகியோருடன் சிலாங்கூர் துணை முப்தி அப்துல் மஜிட் ஒமாரும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று மட்டுமே சிலாங்கூர் சுல்தான் ஆலோசனை வழங்கியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அவரது ஆலோசனையின் பேரில்தான் அந்த ஆலோசனை மன்றம் அமைக்கப்பட்டது என்று வெளியான செய்தி அறிக்கைகளைக் கேள்விப்பட்டு சுல்தான் “அதிர்ச்சி” அடைந்ததாக முகமட் முனிர் மேலும் கூறினார்.

முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் டமன்சாரா உத்தாமா மெதடிஸ் தேவாலயத்தில் ஜயிஸ் திடீர் சோதனை நடத்தியதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் “தீர்ப்பதற்காக” இந்த மன்றம் அமைக்கப்படுகிறது என்று மந்திரி புசார் நேற்று அறிவித்தார்.