கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் உத்தரவாதச் சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) முதல் கட்ட நிலையில், குறைந்தது 55,539 ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதை உறுதிசெய்ய முயற்சித்து வருகிறது.
தற்போது, தடுப்பூசியின் முதல் கட்டத்தில், மருத்துவ முன்னணி ஊழியர்கள், அமலாக்கப் பணியாளர்கள், மக்கள் நலன்புரி அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
இருப்பினும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன், முதல் கட்டத்தின் கீழ், அதிக ஆபத்துள்ள குழுக்களில் கல்வியாளர்களைப் பட்டியலிடும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றார்.
“அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ள 55,539 ஆசிரியர்களின் பட்டியலைக் கல்வி அமைக்சு தயாரித்துள்ளது.
“இந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை (55,539), முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில், பள்ளி தொடங்கும் தேதிக்கு முன்னதாக, இணைக்க முயற்சிப்போம்,” என்று அவர் கூறினார்.
பள்ளி மீண்டும் மார்ச் மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி, மொத்தம் 416,743 ஆசிரியர்கள், 4,987,401 மாணவர்களுக்குக் கற்பித்ததாக கல்வி அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.