கருத்துக்கணிப்பு: இளைஞர் ஆதரவு பிஎன் பக்கமே

இளைஞர்களின் ஆதரவு பக்காத்தான் ரக்யாட்டைவிட பிஎன்னுக்கே மூன்று விழுக்காடு சாதகமாகவுள்ளது. சுயேச்சை ஆராய்ச்சி அமைப்பான ஸெண்ட்ரம் முன்னோக்கிய ஆய்வியல் மையத்தின் நிறுவனர் அபு ஹசான் ஹஸ்புல்லா இவ்வாறு கூறுகிறார்.

நேற்றிரவு கோத்தா பாருவில் “13-வது பொதுத் தேர்தல்:பிஎன்-னா, பக்காத்தானா” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அபு ஹசான், ஸெண்ட்ரமின் தொடக்கநிலை ஆய்வுகள் பக்காத்தானுக்கு சீன இளைஞர்களிடம் ஆதரவு அதிகம் உள்ளதைக் காட்டுவதாகக் கூறினார்.

“வாக்காளர் பட்டியலில் உள்ள சீனர் சமூகத்தைச் சேர்ந்த இளம் வாக்காளர்களில் 88-இலிருந்து 90விழுக்காட்டினர் பக்காத்தானுக்கு ஆதரவாக உள்ளனர்”.

பின்னர் கருத்தரங்கு முடிந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, மொத்த சீன வாக்காளர்கள் என்று பார்த்தால்கூட அவர்களிடமும்  இதே அளவு ஆதரவு பக்காத்தானுக்கு இருக்கிறது என்றாரவர்.

“பால், வயது வேறுபாடின்றிப் பார்த்தால்கூட மொத்த சீன வாக்காளர்களில் 82-இலிருந்து 88விழுக்காட்டினர் பக்காத்தான் ரக்யாட்டுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.

“மலாய் வாக்காளர்களில்  பக்காத்தானை ஆதரிப்பவர் எண்ணிக்கையில் மாற்றமில்லை. அது 22-இலிருந்து 28-விழுக்காடு என்ற அளவில்தான் உள்ளது. இதை வைத்துப் பார்த்தால் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் மூன்று விழுக்காடு பிஎன்னுக்குச் சாதகமாக உள்ளது”. 

இந்தக் குறுகலான சாதகநிலை பொதுத் தேர்தலுக்குள் மாறும் நிலையும் உண்டு என்று அபு ஹசான் குறிப்பிட்டார்.

“மலாய் இளைஞர்கள் தயக்கம் காட்டுபவர்கள், பொறுத்திருந்து பார்ப்போம் என்ற நினைப்பவர்கள்….

“அந்த மன நிலை பொதுத் தேர்தல் இரண்டு மூன்று வாரங்கள் இருக்கும்போது மாறலாம்.நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் போன்ற தேசிய விவகாரங்கள் அந்த மாற்றத்தை உண்டுபண்ணலாம்.அப்படிப்பட்ட விவகாரங்கள் மலாய்க்காரர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை”.

அந்த வகையில், மலாய்க்காரர்களின் வாக்குகள் கடைசி நேரத்தில் பக்காத்தானுக்கு ஆதரவாக திரும்பலாம் என்று அபு ஹசான் நினைக்கிறார்.

ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை என்பதால் அவை பற்றிய மேல்விவரங்களைத் தெரிவிக்க அவர் விரும்பவில்லை.

‘இளைஞர் வாக்குகளை முன்னறிவது சிரமம்’

புள்ளி விவரங்கள் என்ன கூறினாலும், இளைஞர் வாக்குகள் எப்படி திரும்பும் என்பதை முன்னறிந்து கூறுவது கடினம் என்றார் கருத்தரங்கில் நடுவர் பணி ஆற்றிய அரசியல் ஆய்வாளர் முகம்மட் ஆகுஸ் யூசுப்.

“அவர்களில் 60 விழுக்காட்டினர் மதில்மேல் பூனைபோல் இருப்பவர்கள்.கடைசி நேரத்தில், நலவளர்ச்சித் திட்டங்கள்,பொருளாதார நிலை, வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்புகள் போன்ற நடப்பு விவகாரங்களைக் கருத்தில்கொண்டு அவர்கள் முடிவு செய்வார்கள்”, என்றார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனிடம் ஆய்வு முடிவுகள் பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டபோது, இப்படிப்பட்ட ஆய்வுகளைத் தம் கட்சி வரவேற்பதாகக் கூறினார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய  இந்தப் புள்ளிவிவரங்கள் கைகொடுக்கும் என்றாரவர்.

“அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எங்களை மேம்படுத்திக்கொள்ள முனைவோம். அது சரியில்லை என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்க மாட்டோம்.எதைச் சொன்னாலும் மறுப்பது என்ற பழக்கமெல்லாம் எங்களிடம் இல்லை”.

அதேபோல் தம் கட்சி ஆய்வு முடிவுகள் தனக்குச் சாதகமாக இருந்தால்கூட அதை உண்மை என்று நம்பி வாளாவிருந்து விடாது என்று மாச்சாங் எம்பியுமான அவர் தெரிவித்தார்.

“எல்லா ஆய்வு முடிவுகளையும் நான் படிப்பது உண்டு.குறிப்பாக எங்கள் தேர்தல் குழுவின் ஆய்வைத் தவறாமல் படிப்பேன்.அது, கட்சியின் உண்மை நிலையை, அதன் பிரச்னைகளை, அதற்குள்ள வாய்ப்புகளையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்கும்.

“ஆனால், அதை நாங்கள் வெளியிடுவதில்லை. உள்ளுக்குள்ளேயே விவாதிப்போம்”, என்று சைபுடின் கூறினார்.

அக்கருத்தரங்கில் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, யுகேஎம் விரிவுரையாளர் சம்சுல் அடாபி மமாட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.