கிளந்தான் இளவரசர் தெங்கு முகமட் பாக்ரி பெத்ரா சுல்தான் இஸ்மாயில், தம்மை தவறாகத் தடுத்து வைத்திருந்தற்காக ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் மூவர் மீது 150 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
ஐஜிபி இஸ்மாயில் ஒமார், ஏஎஸ்பி நோராஸ்மான் இஸ்மாயில், முன்னாள் கிளந்தான் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி அரச மலேசியப் போலீஸ் படை ஆகிய தரப்புக்களை பாக்ரி பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.
ஏஎஸ் டாலிவால் அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் அந்த வழக்கை இன்று தாக்கல் செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தெங்கு பாக்ரி, தாம் பணத்துக்காக அந்த வழக்கைத் தொடுக்கவில்லை என்றும் நீதிக்காகப் போராடுவதாகவும் சொன்னார்.
“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தமது சொந்த மாநில போலீஸ் தலைவரை பிரதிவாதியாகப் பெயர் குறிப்பிட்டுள்ளது இதுவே முதன் முறையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி மாலை 4 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையில் தாம், தமது தந்தையும் அப்போதைய மாநில ஆட்சியாளருமான சுல்தான் இஸ்மாயிலின் அதிகாரத்துவ இல்லமான இஸ்தானா மகோட்டா குபாங் கெரியானில் டிபிஜி 1 என்ற லைசென்ஸ் பிளேட்டைக் கொண்ட பெண்ட்லே புருக்லாண்டஸ் காரை எடுத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு ஒட்டிச் செல்லும் பொருட்டு இருந்ததாக அந்த வழக்கில் பாக்ரி குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் சுல்தான் சிங்கப்பூரில் இருந்ததாக அவர் கூறிக் கொண்டார். அவரும் அவரது வழக்குரைஞர் முகமட் ஹாசிக் பிள்ளையும் அந்தக் காரை ஓட்டினர். ஆனால் எஸ்யூவி வோல்வோ காரில் இருந்த போலீஸ் அதனை தடுத்து நிறுத்தினர். மற்ற போலீஸ் அதிகாரிகள் நுழைவாயிலை மூடினர்.
அதனைத் தொடர்ந்து தாம் சிங்கப்பூருக்கு போக முடியாமல் போய் விட்டது என பாக்ரி கூறினார்.
அரண்மனையிலிருந்து தாம் வெளியேறாமல் தடுக்க இஸ்தானா மகோட்டா நுழைவாயிலுக்கு வெளியில் 20 முதல் 30 பேர் இருந்தனர் என்றும் இளவரசர் குறிப்பிட்டார்.
அரண்மனையிலிருந்து வெளியேற தம்மை அனுமதிக்க வேண்டாம் என போலீஸ் அதிகாரிகளுக்கு கிளந்தான் போலீஸ் தலைவர் ஆணையிட்டதாகவும் பாக்ரி கூறிக் கொண்டார்.
“அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிரதிவாதிகள் என்னைத் தவறாகத் தடுத்து வைத்து அந்த இடத்திலிருந்து என் கார் வெளியேற விடாமல் தடுத்து விட்டனர். அவர்கள் ஆயுதங்களையும் வைத்திருந்தனர். அது என்னை அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. அவர்கள் நுழைவாயிலை மூடியதின் வழி என்னை புறப்பட முடியாமல் தடுத்து விட்டனர்,” என்றார் அவர்.
“நான் ஏன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் என்பதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. நான் என் பயணத்தைத் தொடர முடியாமலும் தடுத்து விட்டனர்.”
அரண்மனையும் அதன் வளாகமும் சுல்தானுடைய தனிப்பட்ட குடியிருப்புப் பகுதியாகும். ஆகவே சுல்தானுடைய அனுமதி இல்லாமல் போலீசார் அதற்குள் நுழையக் கூடாது என்றும் பாக்ரி அந்த வழக்கில் கூறிக் கொண்டுள்ளார்.
சுல்தானிடமிருந்து உத்தரவு ஏதுமில்லை
அந்த கார் அரண்மனையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுவதைத் தடுக்குமாறு தமது தந்தையோ அல்லது தமது தாயாரான ராஜா பெரெம்புவானோ ஆணையிடவில்லை என்றும் இளவரசர் சொன்னார்.
தாம் தவறாகத் தடுத்து வைக்கப்பட்டதின் விளைவாக தமது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் காரை சிங்கப்பூருக்கு ஒட்டிச் செல்லுமாறு அப்போதைய சுல்தான் வழங்கிய உத்தரவையும் நிறைவேற்ற முடியவில்லை என்றும் பாக்ரி கூறினார்.
தவறாகத் தடுத்து வைக்கப்பட்டதற்கு நியாயமான காரணம் ஏதுமில்லை என்றும் அது தீய நோக்கத்தைக் கொண்டது என்றும் அவர் சொன்னார்.
போலீசார் எத்தகைய பஞ்சாயத்துக்கும் இடமின்றி தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அந்த கிளந்தான் இளவரசர் கூறிக் கொண்டார்.
தாம் தடுத்து வைக்கப்பட்டது, சட்டத்துக்கும் அரசமைப்புக்கும் முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவான இழப்புக்களுக்காக 100 மில்லியன் ரிங்கிட்டும் ஏற்படுத்தப்பட்ட இழப்புக்களுக்காக 50 மில்லியன் ரிங்கிட்டையும் அவர் கோரியுள்ளார்.