எங்கே அந்தப் பணம்?,அம்னோவிடம் மஇகா கேள்வி

பத்து தொகுதி மஇகா தலைவர்கள், அத்தொகுதில் வறிய நிலையில் உள்ள இந்திய வாக்காளர்களுக்கு தீபாவளியின்போது கொடுத்திருக்க வேண்டிய உதவித்தொகை என்னவாயிற்று என்று அம்னோவிடம் வினவியுள்ளனர்.

உதவித் தொகைக்காக 207 விண்ணப்பப் பாரங்களைத் தாங்கள் சமர்பித்ததாகவும், அதில் 70 பேருக்குத்தான் ரிம100 வழங்கப்பட்டது என்றும் அதுவும்கூட வாக்குறுதி அளிக்கப்பட்ட ரிம200-இல் பாதிதான் என்றும் அவர்கள் குறைபட்டுக்கொண்டனர். மேலும் 43 பாரங்கள் விண்ணப்பத்தாரர்கள் வாக்காளர்கள் அல்லர் என்பதால் நிராகரிக்கப்பட்டன.

“இதை அறிந்து அதிர்ந்து போனோம். ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதாக உணர்கிறோம்”, என்று பத்து மஇகா தொகுதித் தலைவர் ராமனாதன் சின்னு தெரிவித்ததாக த ஸ்டார் நாளேடு கூறியுள்ளது.

அந்த உதவித் தொகையை வழங்குவது மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு. அமைச்சு அந்தப் பொறுப்பை பிஎன் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்கிறது. அவர்  விண்ணப்பப்பாரங்களையும் பணத்தையும் உறுப்புக்கட்சிகளின் வழியே விநியோகம் செய்ய வேண்டும்.

மாற்றரசுக் கட்சியினர் வசமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள பிஎன் ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரிம2 மில்லியன் கொடுத்து  அங்குள்ள  வறிய மக்களுக்கு விநியோகம் செய்யுமாறு கூறப்படுகிறது.

“இந்தப் பணம் கொடுக்கப்படாதிருக்கிறது. அதற்கு மஇகா-தான் காரணம் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். ஏனென்றால், விண்ணப்பப் பாரங்களில் எங்கள் முத்திரைதானே குத்தப்பட்டிருந்தது”, என்று அவ்வட்டார மஇகா இளைஞர் தலைவர் டாக்டர் பால குமாரன் கூறினார்.

இதன் தொடர்பில் அந்நாளேடு பிஎன் ஒருங்கிணைப்பாளரான யாஹ்யா மாட் கனியைத் தொடர்புகொண்டு பேசியது. அவர், உதவித் தொகை வழங்கல் முடிந்துவிடவில்லை என்றும்  இரண்டாம் சுற்று  விரைவில் தொடங்கும் என்றும் உதவித் தொகைகளை டிசம்பர் 31-க்குள் கொடுத்து முடிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

“இதுவரை, பத்து தொகுதியில் உள்ள சுமார் எண்ணாயிரம் பேருக்கு ரிம1.6மில்லியன் உறுப்புக்கட்சிகளான அம்னோ, மசீச, மஇகா, பிபிபி,கெராக்கான் வழி கொடுக்கப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.