நியூயார்க்:மியான்மரில், ராணுவ ஆட்சிக்கு எதிராக, அமைதிப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில், ராணுவம் புரட்சி நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றியது; அத்துடன் அவசர நிலையை பிரகடனம் செய்தது. இதையடுத்து, அரசு ஆலோசகர், ஆங் சாங் சூச்சி, அதிபர் வின் மைன்த் உள்ளிட்ட தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டங்களில், ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. இதில், 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதை கண்டித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இம்மாத தலை வரான, அமெரிக்க துாதர் லின்டா தாமஸ் தாக்கல் செய்த தீர்மானம், ஒருமன தாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மியான்மரில் அமைதியாக போராட்டம் நடத்திய பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் மீது ராணுவம் நடத்திய வன்முறை தாக்குதலை, கவுன்சில் கடுமையாக கண்டிக்கிறது. ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் விடுவிக்க வேண்டும். ராணுவம், ஜனநாயக அரசிடம், மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
dinamalar