ஷா அலாம் கோவில் செக்சன் 23க்கு இடம் பெயருவது, ஜனவரியில் நிறைவடையும்

இந்து ஆலயம் ஒன்று ஷா அலாம் செக்சன் 23க்கு இடம் பெயரும் நடவடிக்கைகள் அடுத்த மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலை சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோட்ஸியா இன்று வெளியிட்டார்.

அந்த ஆலய நிர்வாகம் உட்பட அனைத்துத் தரப்புக்களுடைய கருத்துக்களும் பெறப்பட்ட பின்னர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை செக்சன் 19லிருந்து இடம் மாற்றுவதற்கான முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த ஆலயம் அமைந்துள்ள, பிகேஎன்எஸ் என்ற சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்துக்குச் சொந்தமான 0.2 ஹெக்டர் நிலத்தை வழிப்பாட்டு பகுதியாக அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசாங்கம் செய்து கொண்டிருப்பதாகவும் ரோட்ஸியா தெரிவித்தார்.

டிசம்பர் 15ம் தேதி இடம் பெயரும் பணிகளைத் தொடங்குமாறு மாநில அரசாங்கம், கோவில் குழுவுக்குப் பணித்துள்ளது. செக்சன் 23ல் புதிய கோவில் ஜனவரி 27க்குள் தயாராகி விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்”, என அவர் இன்று ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.

“கோவிலை இடம் மாற்றம் நடவடிக்கைகள் முழுமை பெற்ற பின்னரே செக்சன் 19ல் உள்ள கோவிலின் பழைய அமைப்பை நாங்கள் உடைப்போம்.”

என்றாலும் செக்சன் 23ல் உள்ள அந்த கோவில் நிலத்துக்கான உரிமையை மாநில அரசாங்கமே வைத்திருக்கும் என்றும் கோவிலை நிர்வாகம் செய்வதற்கான அதிகாரக் கடிதம் குழுவுக்கு வழங்கப்படும் எனவும் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

செக்சன் 23ல் வசிக்கின்றவர்களில் 70 விழுக்காட்டினர் முஸ்லிம்களாக இருப்பதால் அந்தக் கோவில் அங்கு அமைக்கப்படுவதற்கு அதன் குடியிருப்பாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

தொடக்கத்தில் யோசனை கூறப்பட்டது போல செக்சன் 22க்கு அந்த ஆலயம் மாற்றப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அந்தக் கோவில் இப்போது செக்சன் 19ல் அமைந்துள்ளது. அது முன்னைய சுங்கை ரெங்காம் தோட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்தத் தோட்டத்தை பிகேஎன்எஸ் குடியிருப்புப் பகுதியாக மேம்படுத்தியுள்ளது.

இதனிடையே அந்தக் கோவிலில் சிற்ப வேலைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 441,000 ரிங்கிட் குழுவுக்குத் தேவைப்படுவதகாவும் கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்புகின்றவர்கள் கோவில் பொருளாளர் என் ஏ ராமுவுடன் 012- 2347884 என்ற கைத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆலயக் குழு செயலாளர் என் சித்ரா கூறினார்.