இன்று, பத்திரிகையாளர் சந்திப்பில், அடுத்த பொதுத் தேர்தலில் (ஜி.இ) வெற்றி பெற்றால், கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்றக் கேள்விக்கு, “ம்ம்ம்… நீங்கள் இப்போது அவருடன்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,” என்று அம்னோ துணைத் தலைவர், மொஹமட் ஒரு நொடி கழித்து கூறினார்.
அது அந்த அறையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இருப்பினும், சுமார் 15 விநாடிகள் சிரிப்பிற்குப் பிறகு, அது ஒரு நகைச்சுவைக்காகக் கூறப்பட்ட தகவல் என்று விரைந்து விளக்கினார்.
கோலாலம்பூர், புத்ரா உலக வர்த்தக மையத்தில், அம்னோவின் வருடாந்திர மாநாட்டை மொஹமட் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
கோவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட 74-வது அம்னோ பொது மாநாடு, நாளை அதே இடத்தில் நடைபெறும்.
ஜிஇ14-ல், முதல் முறையாக அம்னோ தலைவர்கள் பிரதமராகத் தவறிவிட்டனர், பக்காத்தான் ஹராப்பான் கவிழ்க்கப்பட்டு தேசியக் கூட்டணி (பி.என்.) தோன்றுவதற்கு முன்பு, கட்சி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தது.
இருப்பினும், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் தேசியக் கூட்டணியின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இன்று தனது உரையில், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கும் எந்தவொரு தரப்பினருடனும் அம்னோ விவாதத்திற்குத் திறந்திருப்பதாகக் கூறினார்.
எந்தவொரு புரிதலிலும், அம்னோ தலைமையேற்க வேண்டும், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று மொஹமட் வலியுறுத்தினார்.
பிரதமர் வேட்பாளர் குறித்து கேட்டபோது, இந்த விவகாரத்தைப் பிறகு அந்தக் கட்சிகள் முடிவு செய்யும், ஆனால் அதை அம்னோதான் வைத்திருக்கும் என்று அவர் சொன்னார்.
“பிரதமர் பதவி அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுக்கு உரியது,” என்றார் மொஹமட்.