டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், லங்காவியிலிருந்து நேற்றிரவு எட்டு மணிக்குத் திரும்பியதும் கட்சியை மருட்டி வரும் இன்னொரு நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் இறங்கினார்.
லங்காவியில் கேடி துன் அரசாக் நீர்மூகிக் கப்பலில் சோதனைப் பயணம் மேற்கொண்டு திரும்பிய அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று டிஏபி தலைவர்களை இரவு 10 மணிக்குச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
துணை முதலமைச்சர் II பி ராமசாமி, ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர் எஸ் என் ராயர், பாகான் டாலாம் உறுப்பினர் ஏ தனசேகரன் ஆகியோரே அந்த மூவர் ஆவர். அவர்கள் “ஞானாசிரியர்களும் ஜமீன்தார்களும்” என்னும் கருத்து மீது கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர்.
வரும் பொதுத் தேர்தலில் தங்களது சேவகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தொகுதிகளை வாக்குறுதி அளிக்கின்ற அல்லது அறிவிக்கின்ற ஜமீன்தார்களாக இருக்க வேண்டாம் என கட்சித் தலைவர்களுக்கு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் அறிவுரை கூறியதைத் தொடர்ந்து அந்த மூவரும் அறிக்கைகளை வெளிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகைய முடிவுகளைச் செய்வது கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவின் உரிமை என கர்பால் வலியுறுத்தினார்.
நாளை டிஏபி-யின் பினாங்கு மாநில மாநாடு நடைபெறும் போது அந்த மோதல்கள் வெடிக்காமல் இருப்பதற்குத் தீர்வு காண லிம் முயலுவார் என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.
அவர் இன்றிரவுக்குள் அதனைத் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் அது ஞாயிற்றுக் கிழமை அந்தப் பிரச்னை பெரிதாகி விடும். அந்த சூழ்நிலை பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிக்கு நல்லதல்ல,” என அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
ராமசாமிக்கு எதிராக ஆட்சேபம்
லிம்-முடன் அந்தக் கூட்டத்தில் கர்பால், சம்பந்தப்பட்ட மூவர் ஆகியோருடன் பினாங்கு டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ், மாநிலச் செயலாளர் இங் வெய் ஏய்க் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வெள்ளிக் கிழமை மாநில டிஏபி மத்தியக் குழு உறுப்பினரான ராயர், 40 பேருடன் ஜாலான் தலிபோனில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பின்னர் தகராறு மோசமடைந்தது.
கர்பால்சிங், கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆகியோரது அறிவுரையைத் தொடர்ந்து ராயர் அந்த ஆர்ப்பாட்டத்தைக் கை விட்டார். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, ராமசாமி தமது ஞானாசிரியர் அறிக்கையை மீட்டுக் கொள்வதோடு மூத்த தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நெருக்குதல் தொடுத்தார்.
இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் “அரசாங்க நிதிகளை தவறாகப் பயன்படுத்தியதாக டிவிட்டரில் தகவல் அனுப்பிய ராமசாமியின் தனிப்பட்ட உதவியாளர் சதிஷ் முனியாண்டியையும் ராயர் சாடினார். அவர்களில் ஒருவர் இந்து அற வாரியத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் மற்றவர் மாநில நிதியிலிருந்து தமது சொந்த ஒட்டுநருக்கு சம்பளம் கொடுத்தார் என்றும் சதிஷ் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
“தனசேகரன் கடந்த ஆண்டு இந்து அறவாரியத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அதற்குப் பதில் ராமசாமி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். எனக்கு சொந்த ஒட்டுநர் கிடையாது ஆனால் மெய்க்காவலர் இருக்கிறார். அவருக்கு அரசாங்க நிதியிலிருந்து நான் சம்பளம் கொடுப்பதில்லை,” என ராயர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
சதிஷ் தமது டிவிட்டர் தகவல்களுக்கு 24 மணி நேரத்துக்குள் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இல்லை என்றால் அந்த விஷயத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கொண்டு செல்லப் போவதாகவும் ராயர் சொன்னார்.
அதற்குப் பதில் அளித்த சதிஷ், தமது டிசம்பர் 7ம் தேதி டிவிட்டர் தகவல்கள் எந்த ஒரு டிஏபி அல்லது பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
“அது பொதுவான அறிக்கை. தற்போது நிகழ்கின்ற கருத்து மோதல்கள் தொடர்பில் நான் நமது தலைவர்கள் யாரையும் குற்றம் சாட்டவில்லை,” என்றும் அவர் சொன்னார்.
“பினாங்கு பக்காத்தான் அரசாங்கத்துக்கு எதிராக அந்த விவகாரத்தை பிஎன் தொடர்புடைய ஊடகங்கள் பெரிதாக்கி வருகின்றன. கட்சி ஐக்கியத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்,” என்றும் சதிஷ் மீண்டும் வலியுறுத்தினார்.