பாஸ் கட்சி சமூக நல நாடு என்ற தனது யோசனை குறித்து விளக்கமளிக்கிறது

ஹுடுட் சட்ட அமலாக்கத்தை வலியுறுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ள தனது தோற்றத்தை சீர்படுத்திக் கொள்ளும் பொருட்டு பாஸ் கட்சி,  சமூக நல நாடு எனத் தான் கூறுவதை விளக்கும் புத்தகம் ஒன்றை வெளியிடுகிறது.

“சமூக நல நாடு” என்னும் தலைப்பில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் எழுதியுள்ள அந்தப் புத்தகம் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஷா அலாம் பிகேஎன்எஸ் வளாகத்தில் வெளியீடு காணும்.

பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், மத்தியக் குழு உறுப்பினர் காலித் சாமாட், சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான் ஆகிய மூத்த கட்சித் தலைவர்கள் அந்த நிகழ்வில் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்றினால் தோழமைக் கட்சிகளுடன் பாஸ் பின்பற்றவிருக்கும் கோட்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றையும் அந்த 59 பக்க புத்தகம் விவரிக்கிறது.

தூய்மையான, நியாயமான, நம்பிக்கையான அரசாங்கத்துக்கும் கருணையுள்ள, அமைதியான, ஐக்கியமான சமூகத்துக்கும் நீடித்து நிற்கும், சமநிலையான, நியாயமான பொருளாதாரத்துக்கும் வாக்குறுதி அளிக்கும் 10 அம்ச பாஸ் செயல் திட்டமும் அதில் அடங்கியுள்ளது.

தரமான கல்வி, திறமையான சுகாதார சேவைகள், விரிவான சமூக நலச் சேவைகள், தார்மீகப் பண்புகளைக் கொண்ட ஒற்றுமையான மகிழ்ச்சியான குடும்பங்கள் ஆகியவற்றையும் கூட அப்துல் ஹாடி அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அந்தப் புத்தகம் இளைஞர்களைப் பற்றியும் உற்பத்தித் திறன், அடிப்படை வசதிகள், சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே “சமூக நல நாட்டுக்கான அடிப்படைக் கோட்பாடு” என்னும் தலைப்பில் பாஸ் தலைவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் நிகந்த பாஸ் கட்சியின் 57வது ஆண்டு மாநாட்டில் “சமூக நல நாட்டை மேம்படுத்துவது” என்னும் கருப் பொருளில் அப்துல் ஹாடி ஆற்றிய கொள்கை உரையின் தொடர்ச்சியாக அந்த இரு புத்தகங்களும் கருதப்படுகின்றன.