லிம்-முக்கு சவால் விடுக்க வேண்டாம் என அபிம் சுவா-வை எச்சரிக்கிறது

ஹுடுட் பிரச்னை மீது விவாதம் நடத்த வருமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கு சவால் விடுக்க வேண்டாம் என மசீச தலைவர் சுவா சொய் லெக்-கை அபிம் எனப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் எச்சரித்துள்ளது.

“அந்த விவகாரம் மீது விவாதம் நடத்த வருமாறு இந்த நாட்டில் உள்ள மற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களுக்கு சவால் விடுக்கும் சுவா-வின் வெளிப்படையான நடவடிக்கை குறித்து அபிம் வருத்தமடைந்துள்ளது. அவ்வாறு சவால் விடுப்பது அரசியல் சமயத் தீவிரவாதத்திற்கு வழி வகுத்து விடும்,” என அதன் தலைமைச் செயலாளர் முகமட் ராய்மி அப்துல் ரஹிம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

நேற்று மசீச தலைமையகத்தில் சுவா-வின் பேராளரிடம் கொடுக்கப்பட்ட அபிம் மகஜரில் அடங்கியுள்ள பல கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.

என்றாலும் ஹுடுட் விஷயம் மீது ஆர்வமுள்ள எந்த ஒரு முஸ்லிம் அல்லாத தரப்புடனும் கல்வி சார்ந்த நிலையில் ரகசியமாக விவாதிக்கப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும் முகமட் ராய்மி குறிப்பிட்டுள்ளார்.

மசீச அண்மையில் ஏற்பாடு செய்த ஹுடுட் பற்றிய கருத்தரங்கில் தாம் விடுத்த அறிக்கைகளுக்காக சுவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரினார்.

சுவா உரை கடுமையாக குறை கூறப்பட்டது

ஹுடுட் சட்டம் நாட்டின் பொருளாதாரத்தையும் அந்நிய முதலீடுகளையும் எப்படிப் பாதிக்கும் என்பதை சுவா அந்தக் கருத்தரங்கில் ஆற்றிய உரையில் சுவா விரிவாக எடுத்துரைத்தார். அதனால் அனைத்து மலேசியர்களும் இறுதியில் காயமடைவர் என்றும் அவர் சொன்னார்.

“அவரது அறிக்கை குற்றச்சாட்டுக்கள், மாறுபாடான எண்ணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாகும். அவருடைய கருத்துக்களை நியாயப்படுத்தக் கூடிய எந்த உண்மைகளையும் அனுபவ ரீதியிலான புள்ளி விவரங்களையும் அவை சார்ந்திருக்கவில்லை,” என்றும் முகமட் ராய்மி குறிப்பிட்டார்.

“அவரது அறிக்கையும் நடவடிக்கைகளும் முஸ்லிம் அல்லாத சமூகத்தில் அரசியல் செல்வாக்கைப் பெறும் நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. மறைமுகமாக ஹுடுட் சட்டத்தை வெறும் அரசியல், தேர்தல் பிரச்னையாக மறைமுகமாக தாழ்த்தியுள்ளது.  இந்த நாட்டில்   உள்ள முஸ்லிம்களுடைய உணர்வுகளையும் அது காயப்படுத்தியுள்ளது.”

ஹுடுட் சட்டம் மீது பல அறிஞர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின் விவரங்களும் அந்த மகஜரில் இடம் பெற்றுள்ளன.

“எதிர்காலத்தில் அத்தகைய அறிக்கைகளை விடுப்பதற்கு முன்னர் ஹுடுட் மற்றும் இஸ்லாமியச் சட்டம் மீதான புரிந்துணர்வை சுவா அதிகரித்துக் கொள்ள கல்வி சார்ந்த அந்த ஆய்வுகள் உதவும் என நாங்கள் நம்புகிறோம்.”