ஒரு வாகன உபரிபாகங்கள் கடை உரிமையாளர், காவலில் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும் இப்போது அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவரது குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருப்பினும், செந்தூல் மாவட்டக் காவல்துறைத் தலைவர் பே எங் லாய் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தார், மேலும் கைதிக்குச் சட்டப்பூர்வ அணுகலை மறுக்க தனக்கு சட்ட காரணங்கள் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 38 வயதான ஹோங் சென் பெங்கின் குடும்பத்தினர், காரைத் திருடிய சந்தேகத்தின் பேரில், மே 1-ம் தேதி, அதிகாலை 3 மணியளவில் செந்தூல் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
“ஹோங்” என்று மட்டுமே அறிமுகம் செய்ய விரும்பிய சென் பெங்கின் சகோதரி, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்ததால், தனது சகோதரரின் கைது குறித்து ஆரம்பத்தில் தனக்குத் தெரியாது என்று கூறினார்.
“என் தந்தை ஏப்ரல் 29-ம் தேதி காலமானார். ஏப்ரல் 30-ம் தேதி இரவு வரை அந்தச் சடங்குகளில் கலந்துகொண்ட பின்னர், என் சகோதரர் வீடு திரும்பினார். அவர் கோலாலம்பூரில் ஓர் அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
“மறுநாள் காலையில், நான் அவருடைய இல்லத்திற்குச் சென்றபோது, கதவு உடைந்திருப்பதைக் கண்டேன்,” என்று அவர் கூறினார்.
தன்னுடையச் சகோதரரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஹோங், பக்கத்து வீட்டிலிருந்து உரத்த சத்தங்கள் வந்தன என்றும், ஆனால் அவரது சகோதரரை யாரும் பார்க்கவில்லை என்றும் அண்டை வீட்டார் சொன்னதாக தெரிவித்தார்.
தனது தந்தையின் இறுதி சடங்கு ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தபோது, அன்றிரவு தனது சகோதரர் காணாமல் போனது குறித்து போலிஸ் அறிக்கையைப் பதிவு செய்ய ஹோங் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அன்று மதியம், அவரது மாமாவுக்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.
“என் சகோதரரும் அவரது காதலியும் போலிஸ் காவலில் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார், என் சகோதரர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்,” என்று ஹோங் கூறினார்.
அழைத்த அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது என்பதை அறிய அவரது குடும்பத்தினர் செந்தூல் மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு விரைந்ததாகவும், ஆனால் அவர்கள் சென் பெங்கைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் ஹோங் கூறினார்.
ஹோங் தனது குடும்பம் தனது சகோதரனை அங்குப் பார்த்ததாகவும், ஆனால் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டதாகவும் கூறினார்.
“என் சகோதரர் நொண்டியதை நான் பார்த்தேன்,” என்று அவர் கூறினார்.
அதனை அடுத்து, குடும்பத்தினர் வழக்கறிஞர் கெப்பி வோங்கை, சென் பெங் வழக்கை கையாள நியமித்தனர். மே 3-ம் தேதி செந்தூல் மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு சென் பெங்கைச் சந்திக்க கெப்பி வோங் சென்றுள்ளார்.
இருப்பினும், சென் பெங்கைச் சந்திக்க காவல்துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டதாக வோங் கூறினார்.
செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட வோங், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டவர்களை அணுக மறுப்பது சட்டத்திற்கு எதிரானது என்றார்.
“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 28A-இன் படி, காவல்துறையினர் கைதிகளுக்குச் சட்டபூர்வமான அணுகலை அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
விசாரணையைப் பாதிக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே, சட்டப்பூர்வ அணுகலை மறுப்பது அனுமதிக்கப்படுவதாகவும், அதனைக் காவல்துறை துணை மேலதிகாரி அல்லது அதற்கு மேற்பட்டப் பதவியில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வோங் கூறினார்.
“விசாரணைகளை நடத்துவது காவல்துறையின் கடமை என்பதனை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில், ஒரு மனிதனாக அவனது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
அந்த நபரின் தடுப்புக்காவல் மே 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் வோங் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, செந்தூல் காவல்துறைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படும் என்று நம்புவதாகவும் வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.
சென் பெங்’குக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படலாம் என்றும் வோங் கவலை தெரிவித்தார்.
சென் பெங்கிற்கு எதிரான கார் திருட்டு குற்றச்சாட்டுகள் பற்றி தெரியாது என்பதைக் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஹோங்கின் மாமா மே 3-ம் தேதி போலிஸ் புகாரைப் பதிவு செய்திருந்தார்.
இதற்கிடையில், கைதிகளுக்குச் சட்டப்பூர்வ அணுகலை மறுப்பதற்கான காரணங்கள் இருப்பதாக பே கூறினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 28A(8)-இன் கீழ், சென் பெங் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பே கூறினார்.
“இந்த உட்பிரிவின் அடிப்படையில், விசாரணையைப் பாதிக்கும் எனக் கருதப்பட்டால், நண்பர், உறவினர் அல்லது வழக்கறிஞரைத் தொடர்புகொள்ள கைது செய்யப்பட்டவருக்கு உள்ள உரிமையை மறுக்க காவல்துறைக்கு அனுமதி உண்டு,” என்று பே கூறியதாக மலாய் மெயில் மேற்கோளிட்டுள்ளது.