அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் மலாய் வேட்பாளர்களை நிறுத்துமாறு அந்த மாநில அம்னோ தொடர்புக் குழு டிஏபி-க்கு சவால் விடுத்துள்ளது.
டிஏபி-க்கும் பிஎன் -னுக்கும் இடையில் யாரைத் தெரிவு செய்வது என்னும் முடிவை எடுக்க கிளந்தான் மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அதன் துணைத் தலைவர் டாக்டர் அவாங் அடெக் ஹுசேன் கூறுகிறார்.
எதிர்த்தரப்புக் கூட்டணிக்கும் பின்னணியில் உள்ள வலிமை டிஏபி ஆகும். பிகேஆர்-ரோ, பாஸ் கட்சியோ அல்ல என பாச்சோக்கில் கம்ப்போங் குபாங் தெலாகாவில் ஒற்றுமைத் திட்டத்தை நிறைவு செய்து வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வியல் துறை ஏற்பாடு செய்த அந்தத் திட்டத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் 84 பட்டதாரி மாணவர்கள் பங்கு கொண்டனர்
13வது பொதுத் தேர்தலில் மலாய் பெரும்பான்மை தொகுதிகளில் டிஏபி மலாய் வேட்பாளர்களை நிறுத்த எண்ணியுள்ளது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவாங் அடெக் அவ்வாறு பதில் அளித்தார்.
டிஏபி-யின் யோசனை, பாஸ், பிகேஆர் கட்சிகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதை சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் காலித் அப்துல் சாமாட் உறுதி செய்துள்ளார்.
அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியில் டிஏபி தான் மிகவும் செல்வாக்குமிக்க கட்சி என அம்னோ கூறுவதை டிஏபி-யின் நோக்கம் மெய்பிப்பதாக நிதித் துணை அமைச்சருமான அவாங் அடெக் சொன்னார்.
மலாய் வேட்பாளர்களை நிறுத்த டிஏபி விரும்புவது, கூட்டணியில் உள்ள தனது தோழமைக் கட்சிகளை அலட்சியம் செய்து விட்டு எல்லா மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்தி நாட்டை ஆள டிஏபி விரும்புவதற்குத் தக்க சான்று எனவும் அவர் கூறிக் கொண்டார்.
“நாங்கள் அவர்களை வரவேற்கிறாம். அவர்களை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்,” என்றார் அவர்.
பெர்னாமா