பெட்ரோல் ரோன்95, ரோன்97, டீசல் விலைகள் மே 19 வரை நிலைநிறுத்தப்படும்

ரோன்95, ரோன்97 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சில்லறை விலைகள், நாளை தொடங்கி மே 19 வரையில், ஒரு லிட்டருக்கு முறையே RM2.05, RM2.60 மற்றும் RM2.15 ஆக நிலைநிறுத்தப்படும்.

இந்த விலை, தானியங்கி விலை நிர்ணயம் (ஏபிஎம்) சூத்திரத்தைப் பயன்படுத்தி, வாரந்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலையை அடிப்படையாகக் கொண்டது என்று நிதி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“உலகச் சந்தையில், எண்ணெய் விலைகளின் உண்மையான அதிகரிப்பின் விளைவுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் ரோன்95 பெட்ரோலின் சில்லறை விலையை லிட்டருக்கு RM2.05 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு RM2.15 என்ற உச்ச விலையில் பராமரித்து வருகிறது,” அமைச்சு இன்று கூறியது.

ஆயினும், அவை இரண்டுக்குமான உண்மையான சந்தை விலைகள் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலை மட்டத்தை விட உயர்ந்துள்ளன.

“உலகக் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைத் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அவர் கூறினார்.