மஞ்சள் நிற உடைக் குழுவினர் கேஎல்சிசி தடை மருட்டலை மீறினர்

கேஎல்சிசி-யில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி  அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப் போவதாக கேஎல்சிசி கடைத் தொகுதி நிர்வாகம் ஏற்கனவே மருட்டியிருந்த  போதிலும் அவர்கள் கூடினர்.

அவர்களில் பெரும்பாலோர் மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தனர். அவர்கள் கேஎல்சிசி-யின் மத்தியப் பகுதிக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு  முன்னால் ஒன்று திரண்டு படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது அவர்கள் “அந்த மசோதாவை கொன்று விடுங்கள்” ( “Kill the bill”) “மகிழ்ச்சிகரமான மனித உரிமை நாள் (“Happy human rights day” )  பாடல்களை பாடினர்.

அந்த நேரத்தில் ஐந்து பாதுகாவலர்கள் சூழ்நிலையைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் குழுவினர் தேசிய கீதத்தையும் “Jingle Bell” பாடலையும் பாடினர். அந்தக் கடைத் தொகுதிக்கு பொருட்களை வாங்க வந்த மக்களும் அங்கு நிறைந்திருந்தனர்.

அவர்கள் இன்றைய தினம் அனுசரிக்கப்படும் அனைத்துலக மனித உரிமை நாளையும்  அவர்கள் கொண்டாடினர்.

ஒன்று கூடுவதற்கு முன்னதாக அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் கேஎல்சிசி கடைகளில் பொருட்களை வாங்கினர். அந்தக் குழு ஏற்பாடு செய்திருந்த நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றாகும்.

‘வழக்கத்துக்கு மாறாக நடந்து கொண்டால்’ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கேஎல்சிசி நிர்வாகம் எச்சரித்திருந்தது.

பின்னர் பொருட்களை வாங்கியதற்கான ரசீதுகள் ஏற்பாட்டாளர்களிடம் கொடுக்கப்பட்டன. “பொருட்களை வாங்குவது, உணவு உட்கொள்வது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது” ஆகிய வழக்கமான நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டதைக் காட்டுவதே அதன் நோக்கமாகும்.