கணபதி வழக்கு குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும் – அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

கடந்த ஏப்ரல் மாதம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்த, போலிஸ் தடுப்புக்காவல் கைதி ஏ கணபதியின் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை விசாரிப்பது குறித்த போலிஸின் நடவடிக்கைகளை மலேசிய அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்டித்துள்ளது.

கணபதியின் மரணம் குறித்த மூன்று கட்டுரைகள் தொடர்பாக, காவல்துறை தனது இரு பத்திரிகையாளர்களிடமிருந்து அறிக்கைகளை எடுத்துள்ளதாக மலேசியாகினி தெரிவித்த ஒரு நாள் கழித்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“என்ன நடந்தது என்பதை அறிய கணபதி குடும்பத்திற்கு உரிமை உண்டு. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

“விசாரணைகள் திறந்த நிலையில், வெளிப்படையாக செய்யப்பட வேண்டும். ஆனால் காவல்துறையினர்தான் கூறப்படும் சம்பவத்தின் சூத்திரதாரி என்றால், காவல்துறையை விசாரிப்பது யார்?

“இந்த விஷயத்தில் செய்தி வெளியிட ஊடகங்களை அனுமதிக்க வேண்டும். மக்களுக்குத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு,” என்று அந்த மனித உரிமைகள் குழு இன்று தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளது.

புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில், நேற்று மலேசியாகினி துணை ஆசிரியர்கள் ருஸ்னிஸம் மகாத் மற்றும் ஏய்டி அஸ்ரி அப்துல்லா ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம், போலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த ஏ கணபதி, 40, தொடர்பான மூன்று கட்டுரைகள் தொடர்பாக அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மலேசியாகினி -யின் மற்றொரு பத்திரிகையாளர் பி நந்தகுமார் விசாரணையில் உதவ அழைக்கப்பட்டார், ஆனால் அவர் கோவிட் -19 தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதால் கலந்துகொள்ள முடியவில்லை.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில், பொது தேசத் துரோகத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(பி)-இன் கீழ், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

இதற்கிடையில், அந்த மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஊடகவியலாளர்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தும் ஆர்வலர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் விசாரணைகளையும் விமர்சித்தது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பல தரப்பினர் தங்களது பணிகள் அல்லது அறிக்கைகள் தொடர்பாக காவல்துறையினரின் விசாரணையை எதிர்கொண்டு வருவதால், பேச்சு சுதந்திரம் பெருகிய முறையில் அச்சுறுத்தப்படுவதாக அந்த அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

“கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மதிக்கும் ஒரு ஜனநாயக நடைமுறையில், அரசாங்கம் பத்திரிகையை ஒரு தீயதாகக் கருதுவதில்லை, மேலும் விமர்சனத்தையும் நையாண்டியையும் பேச்சு சுதந்திரமாக ஏற்றுக்கொள்கிறது,” என்று ஆசியா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் லிண்டா லக்தீர் கூறினார்.