கோரோனா எல்லை மீறிவிட்டது –  முஹிடின் அரசாங்கம்   முழுப்பொறுப்பேற்கவேண்டும் –  குலாவின் சாடலும் ஆலோசனையும்!

“இந்த ஓரு வருடத்தில் கொரோனா தொற்றுப் பரவல்  கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நான் கருதுகிறன் . நமது அண்டை நாடுகளான , சிங்கப்பூர் தாய்லாந்து, வியட்நாம் இவைகளை விட மலேசியா நாட்டின் கொரோனா தொற்று மிக மோசமான நிலைமையை எட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணிக்கையில் நம்மை விட பல மடங்கு அதிகமாக உள்ள இந்தோனீசியா கூட மலேசியாவின் நிலைமை அங்கும் வரக்கூடாது என்று உதாரணம்  காட்டும் அளவுக்கு நம்முடைய கோரோனா  நிலைமை இருக்கின்றது” என்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் குலசேகரன்.

மேலும் தனது பத்திரிக்கை செய்தியில், “பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள்  ஒரு சேர இணைந்து மக்களின் நலன் ,பாதுகாப்பு இவற்றிற்காக    மீண்டும்  குரல் கொடுக்கும் தருணம் வந்துவிட்டது.” எனக் குறிப்பிட்ட அவர் இதற்காக சில பரிந்துரைகளையும் முன் வைத்தார்.

அவை வருமாறு.

இந்த கொரோனா குறித்த எந்த ஒரு தகவலையும் ஒரு சிறப்பு ஆலோசனை குழு மட்டுமே வெளியிட வேண்டும். கொரோனா ஆலோசனைக் குழு என்று அழைக்கப்படும் இது நடு நிலையான ஆலோசனைகளையும் அறிவிப்புகளையும்வழங்கும் சார்பற்ற  குழுவாக இருக்கும் . தலைமைத்துவ பண்புகளும் திறமையாக பிரச்சனைகளை கையாளும் வழிமுறைகளும் பெரிகாத்தான் அரசிடம் இல்லை. அமைச்சர்களிடையேயும்  அமைச்சு இலாக்கக்களிடையேயும் ஒரு முழுமையான, ஒன்றிணைக்கப்பட்ட  புரிந்துணர்வு இல்லை. அவரவர்கள்  தன்னேச்சையாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருகின்றார்கள். சுகாதார அமைச்சு, மிட்டி, உள்துறை அமைச்சு என ஓரே பிரச்சனைக்கு பல் வேறு விதமான அறிக்கைகள் வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

இந்த சிறப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  அவ்வப்போது மெய்நிகர் நாடளுமன்ற கூட்டத்தொடரின் வழி  விளக்கமளிக்க வேண்டும்.

தொற்று வேகமாக பரவி வருதலாலும்நடப்பு அரசு மக்களை பேணும் கடப்பாடு கொண்டுள்ளதாலும்  தொடர்ந்தார் போல 2 இல் இருந்து 4 வாரங்களுக்கு நாட்டை  முழு  இயல் நிலை முடக்கத்திற்கு கொண்டுவர  உத்தரவிடவேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பும் இங்கு அவசியம் தேவைப்படுகிறது. மக்கள் சமூக இடைவெளி , முகக்கவரி அணிதல், கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவுதல் போன்ற நடைமுறைகளை ஒழுங்காகக் கடைபிடித்தால் தான் இந்த இந்த கோவிட் 19 ஐ  ஒரு கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவரமுடியும். மலிவானதும் சுலபமாக கடைபிடிக்கக்கூடியதுமான இவை நிச்சயம் கோவிட் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

எந்த ஒரு சாக்கு போக்கும் சொல்லாமலும்  ,விலையை பொருட்படுத்தாமலும்,  தடங்கல்கள் ஏதுமின்றி தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள ஏதுவாக  எல்லா வித முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். எதிர்கட்சி  ஆளும் கட்சி  என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா  மாநில மக்களுக்கும் இந்த தடுப்பூசியை வழங்க   ஆவன செய்ய வேண்டும்.

நாட்டை இந்த படு மோசமான  நிலைமைக்கு இட்டுச் சென்றமைக்கு பிரதமர் டான் ஸ்ரீ முகயதின் முழு பொறுப்பேற்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு மேலும் மோசமாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் அவர் உடனடியாக பதவி  விலகவேண்டும்.

எந்த தடைகள் இருப்பினும் அவற்றைக் களையும் வகையில்,   தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தடுப்பூசி உலகில் உள்ள எல்லா ஏழை எளிய மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற வகையில் குரல் எழுப்ப வேண்டும்.

மேலும் விவரிக்கையில், இந்த் முன்னாள் அமைச்சர்,

“நாடு முழு இயல் முடக்கத்திற்கு உள்ளாக்கப்படும்பொழுது , பி 40 குழுமத்தை சேர்ந்தவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் எப்படி சமாளிப்பது என்பதை அரசு தீவிரமாக யோசிக்கவேண்டும்.” என்கிறார்

மேலும், குறிப்பாக அன்றாடம் உழைத்து வருமானம் பெறுவோரான , வாகன ஓட்டிகள், துப்புறவு தொழிலாளர்கள் , இரவு சந்தையில் வியாபாரம் செய்வோர்  , தினக்கூலிக்கு வேலை செய்வோர் இவர்களுக்கு இந்த முடக்க காலகட்டத்தில் குறைந்த பட்ச பணம் நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில்    சேருமாரு அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

“மாதச் சம்பளம் பெறுவோருக்கு ஏற்கனவே சொக்சொ பொன்ற நிறுவனங்கள் சிறப்பு திட்டங்களை கொண்டுள்ளன . நிரந்தர  சம்பளம் பெருவதால் அரசாங்க ஊழியர்களுக்கும் பாதிப்பில்லை. சுய தொழிலும் , உடல் உழைப்பு தொழிலாளர்களும் அதிகம் பாதிப்புக்குள்ளாவதால், இவர்களுகென சிறப்பு நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும். சில உடனடியான பலன் தராத பயிற்சி திட்டங்கள் , தூர நோக்கு வளர்ச்சி திட்டங்கள் , சாலை நிர்மாணித்தல் , பாலம் கட்டுதல் போன்றவற்றிக்கு  ஒதுக்கப்படும் நிதிகள் தற்காலிமாக  நிறுத்தப்பட்டு பி40 குழுமத்திற்கு  வழங்கப்படலாம்.”

“இதற்காக அமைச்சர்களும் , எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட அவர்களின் ஒரு மாத வருமானத்தை இந்த நிதிக்கு கொடுத்து உதவலாம். இந்த கடுமையான சூழ்நிலையில் அவர்கள் நாட்டுக்காக செய்யும் ஒரு சிறு தியாகமாகக் கூட இது  கருதப்படலாம்.”

“தற்பொழுது நாட்டை ஆளும் பெரிகாத்தான் அரசிடம் அனைத்து மக்களுக்கும்  சமமான முறையில்  நீதி பரிபாலனம்   கடைபிடிக்கப்படுவதாக தெரியவில்லை.அமைச்சர்கள் வெளி நாடு சென்று திரும்பினால் 3 நாட்கள் தனிமைபடுத்திக்கொண்டால் போது , ஆனால் அதுவே பொதுமக்கள் என்று வரும் பொழுது அது பொருந்தாது. பொதுமக்கள் நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையை மீறினால் உடனடி தண்டம் , ஆனால் அமைச்சர்கள் அந்த தவற்றை செய்தால் அவர்களுக்கு முதலில் போலிஸ் விசாரணை பின்பு தன் மற்றவை . இப்படி மாறுபட்ட நடைமுறையினால் மக்கள் மிகவும் கோபத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.”

நடப்பு அரசாங்கத்தின் திறமை இன்மையால் இதன் பிறகும்  கொரோனாவினால் உயிர்ச்சேதங்கள் ஏதெனும் ஏற்பட்டால்,  அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்று தீவிர  நடவடிக்கையில் இறங்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் பெரிகாத்தானின்  மொத்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்கிறார் இந்த மூத்த ஈப்போ பாராட் நடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன்.