ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரெயில் பெட்டிகள் உருக்குலைந்து கிடப்பதையும் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்தனர்.
அதேவேளையில் ராவல்பிண்டி நகரில் இருந்து கராச்சி நோக்கி சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலிலும் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
இந்த நிலையில் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்திலுள்ள தார்க்கி என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் சற்றும் எதிர்பாராத வகையில் தடம் புரண்டது.
அந்த சமயத்தில் அருகிலுள்ள மற்றொரு தண்டவாளத்தில் எதிர் திசையில் சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது தடம் புரண்ட மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பாய்ந்து சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதின. அதனை தொடர்ந்து சர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன.
இப்படி 2 ரெயில்களில் இருந்தும் மொத்தம் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் 6 பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்து போயின. அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர்.
இந்த ரெயில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கினர். உள்ளூர் மக்களும் அவர்களுடன் கைகோர்த்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் பெட்டிகள் உருக்குலைந்து கிடப்பதையும் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.
இதையும் படியுங்கள்…பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயங்கர மோதல்- 30 பயணிகள் பலி
எனினும் இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
மேலும் இந்த விபத்தில் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே ரெயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தடம்புரண்ட ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் இன்னும் பலபயணிகள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கோட்கியில் இன்று அதிகாலை நடந்த பயங்கர ரெயில் விபத்தால் கடும் அதிர்ச்சி அடைந்தேன். சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை உறுதிப்படுத்தவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கவும் ரெயில்வே மந்திரியை கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும் ரெயில்வே பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
maalaimalar