டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல்  – குலா கண்டணம்!

வெளி நாட்டினர் உடல் மீது படும்படியாக டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் என சாடுகிறார், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன். அவரின் முழுமையான பத்திரிக்கை செய்தி :

அண்மையில் நான் பார்க்க நேர்ந்த காணொலி ஒன்றில் , தடுத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத  வெளிநாட்டினர் மீது , குடிநுழைவுத் துறை அதிகாரிகள் டெட்டால் எனப்படும் கிருமி நாசினியை தெளித்து  கோவிட் 19 நட்சுக் கிருமியை ஒழிக்கிறோம் என்ற போர்வையில்   நடத்திய கோரக்  காட்சி  என்னை அதிர வைத்தது.  `மிருகங்களுக்குக் கூட இக்காலத்தில் உரிமை ,பாதுகாப்பு  என்று இருக்கும் போது மனிதர்களை அவர்கள் ஆவணங்கள் இல்லாதவர்கள்  என்ற  ஓரே காரணத்தினால் அவர்கள் மீது இந்த கிருமி நாசினியை தெளித்து தாங்கள் கொடூரமானவர்கள் என்று  குடிநுழைவுத் துறை அதிகாரிகள் காட்டிக்கொண்டது சர்வதேச  அளவில் நமது நாட்டிற்கு   கெட்ட பெயரை கொண்டுவந்துள்ளது.

கோவிட் 19 நச்சுக்கிருமி , டெட்டால் போன்ற கிரிமி நாசினிகளால்  ஒழிக்க முடியாது என்பதை  ஆய்வுகள் தெளிவாகக் கூறும் போது எந்த அடிப்படையில் இவர்கள்  இந்த நடவடிக்கையில் இறங்கினார்கள் என்பது தெரியவில்லை . கிரிமி நாசினிக்கு பதிலாக   முகக்கவரி ,கை கழுவும் திரவங்களை   கொடுத்திருக்கலாம்.

மனித கடத்தல், கொத்தடிமை விவகாரத்தில் நமது நாட்டின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்ற காரணங்களால்   ஏற்கனவே மலேசியாவை அமெரிக்க அரசாங்க்கம்  இரண்டாவது கட்ட  கண்காணிப்பில் வைத்துள்ளது  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது . இப்பொழுது நடந்துள்ள இந்த செயல் மீண்டும் உலகத்தின் கவனத்தை  மலேசியா மீது ஈர்த்துள்ளது.

இதனைக் கண்டு மனித வள அமைச்சு அமைதியாக இருக்கக் கூடாது. உடனடி நடவடிக்கை தேவை. வருடாவருடம்  ஜெனிவாவில் உலக தொழிலாளர் நிறுவனம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் மலேசியா கலந்து கொள்ளும்  நோக்கமே  மனித வளத்துறையில்  மலேசியாவும் அதன் பங்கை ஆற்ற கடமைப்பட்டுள்ளது  என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டத்தான். ஆனால் இப்பொழுது ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை அது நடத்திய விதம் உலக தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள  கோட்பாடுகளுக்கு  எதிராக  அமைந்துள்ளது.

ஆவணங்கள் உண்டு, இல்லை என்ற அடிப்படையில்  தொழிலாளர்களை பிரித்து அவர்களை நடத்தும்  விதத்தில் எந்த விதமான  பாரபட்சமும் காட்டக்கூடாது என்பதுதான் வழக்கம், பொது நியதி.

ஆவணங்கள்  இல்லாத ஒரு மலேசிய தொழிலாளி ஒருவர் வெளி நாட்டில் இருக்கும் பட்சத்தில் அவர் மீது டெடாலலை உடல் முழுவதும் தெளித்தால் அதைக்கண்டு மலேசிய அரசாங்கம் வாய் மூடி மௌனமாக  இருக்குமா ?

இது போன்ற விடயங்களில் உள்துறை அமைச்சு , சுகாதார துறையின் ஆலோசனகளை பெறுவது அவசியம் என்று நினைக்கிறேன். இகானாமிக்ஸ் டைம்ஸ் ஒஃப் இந்தியா என்ற பத்திரிக்கை சமீபத்தில், கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த கிருமினி நாசினிகளை மக்கள் மீது தெளிப்பது  அவர்களுக்கு   உடல் ரீதியாகவும்  , உள  ரீதியாகவும்  தீங்குகள் விளைவிக்கும் என்று  இந்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது .இதையும் நமது அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அதே அறிக்கையில் ,கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவரின்  உடம்பின் வெளிப்பகுதியில்  கிருமி நாசினி தெளிப்பது  கிருமியை ஒழிக்கும் என்பதும், அவர் அணிந்திருக்கும் உடைகளின் மேல் தெளிப்பதினால் அங்கு தொற்றியுள்ள   கிருமி அழியும்  என்பதும்  அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வெட்கக்கேடான செயலுக்கு உள்துறை அமைச்சு பாதிக்கப்பட்ட வெளிநாட்டினிரிடத்தும், ஒட்டு மொத்த மலேசியர்களிடத்தும் மன்னிப்பு கேட்க வெண்டுமென கேட்டுக் கொள்கிறன்.

இதன் தொடர்பில் மனித வள அமைச்சு இந்த செயல் குறித்து  ஒரு ஆலோசனை   அறிக்கை வெளியிட்டு , முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உலகத் தொழிலாளர் நிறுவனத்திற்கு மலேசிய மனித வள அமைச்சு  கடமைப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.