வாஷிங்டன் : ஜி – 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கொரோனா முதன் முதலில் எங்கு தோன்றியது என்பது குறித்த விஷயத்தில், சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியதாவது: கொரோனா தோன்றிய விபரங்களை சீனா வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக அமெரிக்கா, உலக நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும். சீனா சொல்வதை எல்லாம் கேட்டு, அமெரிக்கா தலையாட்டாது. இது தவிர, கொரோனா தோன்றியது குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையும் தொடரும்.
கொரோனா தோன்றிய விபரங்களை மறைக்காமல் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்த, அமெரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். உலக சுகாதார நிறுவனம், சீனாவில் மேற்கொண்ட கொரோனா தொடர்பான ஆய்வை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல் வெளிநாட்டு பயணம்
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், ஜோ பைடன், தன் முதல் வெளிநாட்டு பயணத்தை இன்று(ஜூன் 9) துவக்குகிறார். ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், சுவிட்சர்லாந்துக்கு செல்லும் அவர், ஜி – 7 மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்கிறார்.
அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றார் ஜோ பைடன். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால், அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தினார். அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. மற்ற நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு இருந்ததால், எந்த நாட்டுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், தன் முதல் வெளிநாட்டு பயணத்தை அவர், இன்று துவக்குகிறார். முதலில் பிரிட்டன் செல்லும் அவர், ஜி – 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கொரோனாவுக்கு எதிராக உலகளாவிய திட்டம் குறித்து, இந்த கூட்டத்தில் அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் போட்டியை சமாளிக்கும் வகையில், இந்த கூட்டமைப்பு பல முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேச உள்ளார். அடுத்த வாரம் இறுதி வரையிலான இந்த பயணத்தின்போது, நாட்டோ அமைப்பின் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். ஐரோப்பிய யூனியன் – அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த பயணங்களில்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கி கொள்வது உள்ளிட்டவை குறித்து, ஜோ பைடன் பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா செல்லும் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச உள்ளார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
dinamalar