சினார்: சிலாங்கூர் எம்பி பதவிக்குக் குறிவைக்கிறது டிஏபி

டிஏபிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் பதவிமீது ஒரு கண்; அதனால்தான் சிலாங்கூரில் மலாய் வேட்பாளர்களைக் களம் இறக்க திட்டமிடுகிறது என்று சினார் ஹரியான் நாளேடு கூறியுள்ளது.

இதற்காகவே, 2008 பொதுத் தேர்தலில் பாஸும் பிகேஆரும் தோற்றுப்போன தொகுதிகளை அவற்றிடமிருந்து பெற டிஏபி முயல்கிறது என்று சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி அது கூறியுள்ளது.

சிலாங்கூரில் பிகேஆரும் பாஸும் போட்டியிட்டுத் தோற்ற இடங்களில் குறைந்தது எட்டையாவது பெறுவது அதன் நோக்கம்.

“அவர்கள் (டிஏபி), சட்டம் அறிவார்கள். மந்திரி புசார் மலாய்க்காரராகவும் முஸ்லிமாகவும் இருக்க வேண்டும். பேராக்கில் அதுதான் பிரச்னையானது. டிஏபி கூடுதல் இடங்களை வென்றிருந்தாலும் அங்கு அதனால் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை.

“பேராக்கில் பாடம் கற்றுக்கொண்டதால் மந்திரி புசார் பதவியை பிகேஆரிடம் அல்லது பாஸிடம் கொடுப்பதற்குப் பதில் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே டிஏபி கூடுதல் மலாய்க்கார வேட்பாளர்களைக் களமிறங்க விரும்புகிறது”, என்று அந்த வட்டாரம் சினாரிடம் கூறியது.

தகவல் உண்மையா என்பதைக் கண்டறிய டிஏபியைத் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்பது பற்றி அந்நாளேடு எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், அது சிலாங்கூர் பாஸ் செயலாளர் கைருடின் ஒத்மானைத் தொடர்புகொண்டு பேசியுள்ளது. அவர், டிஏபி மலாய் வேட்பாளர்களைக் களம் இறக்குவதை வரவேற்றார். ஆனால், தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை 2008 பொதுத் தேர்தலில் இருந்த நிலைதான் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

“டிஏபி மலாய் வேட்பாளர்களைக் களமிறக்க விரும்பினால் அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களை நிறுத்தலாம்.

“தொகுதிப் பங்கீடு 2008-இல் எப்படி இருந்ததோ அப்படியேதான் தொடரும். மலாய்க்கார வேட்பாளர்களைக் களம் இறக்குவதைக் காரணம்காட்டி பாஸின் இடங்களையோ பிகேஆரின் இடங்களையோ எடுத்துக்கொள்ள முடியாது”, என்றவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, மலேசியாகினி டிஏபி விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவாவுடன் பேசியபோது அவரும் தொகுதி ஒதுக்கீட்டில், தேசிய தலைமை மாற்றங்கள் செய்தாலொழிய இன்றுள்ள நிலையே தொடரும் என்றார்.

அத்துடன் சினார் ஹரியானையும் அவர் சாடினார்.செய்தியை வெளியிடுமுன்னர் அது உண்மையா என்பதை அந்நாளேடு டிஏபியிடம் உறுதிப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்றார்.

“டிஏபி மந்திரி புசார் பதவியைக் குறிவைக்கிறது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு.இது, அம்னோ கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், மலாய்க்கார வாக்காளர்களைப் பயமுறுத்துவதற்காகக் கையாளும் இன்னொரு உபாயம்”, என்று புவா குறிப்பிட்டார்.