உலகம் முழுதும் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9 வாரங்களாக பரவலாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட துவங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்றாம் அலை துவங்கிவிட்டது என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் உலக அளவிலான பாதிப்புகள் உள்ளன.

உலகம் முழுதும் கடந்த வாரம் 55 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரத்தை விட 3 சதவீதம் அதிகம். புதிதாக கொரோனா பாதிப்பும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 30 லட்சம் பேருக்கு கெரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸ் 111 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது மிக கடுமையான பாதிப்பை சந்தித்து இருப்பது இந்தோனேசியா. அங்கு கடந்த மாதம் ஒரு நாள் பாதிப்பு 8 ஆயிரம் பேராக இருந்தது தற்போது 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஒருநாள் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய குழி வெட்டுவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. சவப்பெட்டி கிடைக்கவில்லை. இதனால் இறந்தவர்களின் உறவினர்களே குழி வெட்டும் பணியை செய்கின்றனர். இரவு பகலாக குழி வெட்டும் பணி நடந்தும் பிணங்கள் காத்திருப்பு தொடர்கிறது. பிணத்தை அடக்கம் செய்ய குறைந்தபட்சம் 26 மணி நேரம் ஆகிறது. அர்ஜென்டினாவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் இந்த வாரம் பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் பாதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது.

ஒலிம்பிக்கிற்கு சிக்கல்:

பிரிட்டனில் ஒரு நாள் பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. அமெரிக்காவிலும் 2 மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் நடக்கும் டோக்கியோவில் கெரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பிரச்னைகள் இருந்த போதும் கடந்த ஏப்ரல் மாத பாதிப்பை விட இதுவரையிலான பாதிப்பு பாதியளவாக இருப்பதே ஒரே ஆறுதல்.

dinamalar