தென் ஆப்பிரிக்கா வன்முறை
முன்னாள் அதிபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், கடந்த வாரம் ஜேக்கப் ஜூமா போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜேக்கப் ஜூமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
டர்பனில் உள்ள லென்மன்ட் மருத்துவமனையை கலவரக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஜேக்கப் ஜூமா
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் கொல்லப்பட்டனர். அப்போது நெருப்பில் சிக்கிய ஒரு பெண் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கி வீசினார். இறுதியில் அந்த வணிக வளாகம் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து வரும் போராட்டங்களையும், வன்முறைகளையும் கட்டுப்படுத்த கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தென்னாப்பிரிக்காவில் கலவரம் பரவி வருவதால் 75 ஆயிரம் வீரர்கள் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சி பயங்கரவாதிகள் அமைதியின்மையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
dinamalar