கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு மே வரையிலான காலப்பகுதியில், நாடு முழுவதும் 190 காவல்துறை சோதனைகளில், மனிதக் கடத்தலுக்குப் பலியானதாக நம்பப்படும் 829 பேர் மீட்கப்பட்டு, இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவுகளை (ஐபிஓ) பெற்றனர்.
கடந்த ஆண்டு 74 பேர் பாதுகாப்பு ஆணைகளைப் (பிஓ) பெற்றுள்ளனர், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 65 பேர் அவற்றைப் பெற்றனர் என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர், அப்துல் ஜலீல் ஹசான் கூறினார்.
கடந்த ஆண்டு 146 சோதனைகளின் விளைவாக 599 பேர் மீட்கப்பட்டனர், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையில் 44 சோதனைகளில் 230 பேர் மீட்கப்பட்டனர்.
“மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், கடந்த ஆண்டு 243 பேரும், இவ்வாண்டு 110 பேர் கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மனிதக் கடத்தல் குற்றம் என்பது ஒரு எல்லை தாண்டியக் குற்றமாகும், இது உலகளாவியப் பிரச்சினை என்றும், குற்றத்தை எதிர்ப்பதில் காவல்துறை தீவிரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“அவற்றில், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதும் அடங்கும்; அவை தகவல்களைப் பரப்புவதற்கும், மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றன.
“(கூடுதலாக), பயிலரங்குகள், சேவையின் போது பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு வருடாந்திரத் திட்டங்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முகவர்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து நடத்தப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டங்கள் அதிகாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மனிதக் கடத்தல், குறிப்பாக கட்டாய உழைப்பு ஆகியக் குற்றங்களைத் தடுக்க, அரச மலேசியக் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அப்துல் ஜலீல் கூறினார்.
“கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், காவல்துறை கட்டாயத் தொழிலாளர் சுரண்டல் குற்றம் தொடர்பாக 62 சோதனைகளை நடத்தியது, இந்த ஆண்டு மே வரையில் 25 சோதனைகள் நடத்தப்பட்டன. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியர்கள், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியர்கள் ஆவர்,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா