ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா 4-வது அலை தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அந்த வைரசில் மரபணு மாற்றம் ஏற்பட்டு உருமாறியது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு ஆல்பா என்றும் இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்றும் பெயரிட் டுள்ளனர்.
உருமாறிய கொரோனா வைரசால் பல்வேறு நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது.
குறிப்பாக டெல்டா வகை வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா 4-வது அலை தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு இந்த ஆண்டு குளிர்காலத்தில் உருவாகும் என்று பிரான்ஸ் நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு அரசின் விஞ்ஞான கவுன்சிலின் தலைவர் ஜூன்-பிரான்கோயிஸ் டெல்ப்ரைசி கூறியதாவது:-
டெல்டா வகை மாறுபாட்டால் நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு குளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா மாறுபாடு உருவாக சாத்தியம் உள்ளது. அதன் விளைவுகளை இப்போது கணிக்க முடியாது. அல்லது அது மிகவும் ஆபத்தானதா? என்றும் தற்போது கூற முடியாது.
மக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவதை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்புவது 2022 அல்லது 2023-ம் ஆண்டில் இருக்கலாம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நமக்கு இருக்கும் பெரிய சவால் என்ன வென்றால், தடுப்பூசி போடப்பட்ட நாடுகள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நாடுகள் என்று இரண்டு உலகங்களுடன் நாம் எவ்வாறு இணைந்திருக்க போகிறோம் என்பதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
maalaimalar