தங்கம் வெல்வதே நாட்டுப்பற்று’ – சீன விளையாட்டு வீரர்களுக்கு அழுத்தம்

சீன தடகள வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தம் தரப்படுகிறது. தங்கம் வாங்காத வீரர்கள் தேசப்பற்றில்லாதவர்கள் என்னும் அளவுக்குச் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர் சீன தேசியவாதிகள். விவரிக்கிறார் பிபிசி செய்தியாளர் வாய்யீ யிப்.

சீனாவின் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் அணி சென்ற வாரம் டோக்யோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அதற்காக அந்த அணியினர் கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கண்களில் கண்ணீர் மல்க, லியு ஷிவென், “நான் அணியின் வெற்றிக்கு வித்திடத் தவறிவிட்டேன். என்னை எல்லாரும் மன்னித்துவிடுங்கள்.” என்று மன்றாடினார்.

அவரது அணியைச் சேர்ந்த ஆட்டக்காரரான ஷு ஷின், “இந்த இறுதி ஆட்டத்தை நாடே எதிர்நோக்கியிருந்தது. சீனர்கள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

அவர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த ஒரு விளையாட்டில், அவர்கள் ஜப்பானிடம் இறுதி ஆட்டத்தில் தோற்றதில் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெய்போ என்ற சமூக ஊடகத்தில் சிலர், இந்த இணை நாட்டையே தலைகுனிய வைத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இன்னும் சிலர், ஜப்பானைச் சேர்ந்த ஆட்ட நடுவர்களான ஜுன் மிஸுதானி மற்றும் மிமா ல்டோ ஆகியோர், ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகக் கூடக் கூறினார்கள்.

தேசியவாதம் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒலிம்பிக் வெற்றியை ஒரு விளையாட்டு என்ற கண்ணோட்டத்தைத் தாண்டித் தீவிரமாக விமர்சிக்கும் போக்கு அந்நாட்டில் அதிகரித்துள்ளது.

தீவிர தேசியவாதம் பேசுவோர், ஒலிம்பிக் பதக்கத்தை இழப்பது நாட்டுப்பற்றில்லாமையின் பிரதிபலிப்பு என்னும் அளவுக்கு விமர்சிப்பதாக பிபிசியிடம் நிபுணர்கள் தெரிவித்தார்கள்.

“ஒலிம்பிக் மெடல் கணக்கைக் கொண்டு தேசிய உணர்வை மதிப்பிடுகிறார்கள்” என்று நெதார்லாந்தின் லீடன் ஆசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் ஃப்ளோரியன் ஷ்னீடெர் கூறுகிறார்.

“அயல் நாட்டினருடனான ஒரு போட்டியில் தோற்பது தேசத் துரோகமாகப் பார்க்கப்படுகிறது” என்கிறார் இவர்.

வரலாற்று ரீதியாக சுமூகமான உறவில்லாத ஜப்பானிடம் தோல்வியடைந்ததால் இந்த டேபிள் டென்னிஸ் போட்டி தோல்வி மிகவும் அவமானகரமாகக் கருதப்படுகிறது. 1931-ல் வட சீனாவின் மஞ்சூரியா பகுதியை ஜப்பான் ஆக்கிரமித்ததை அடுத்து, லட்சக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய போராகவே மூண்டது. இது இந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்றும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சீன தேசியவாதிகளுக்கு இந்தப் போட்டி வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல. இது இரு நாடுகளுக்கு இடையிலான போராகவே பார்க்கப்படுகிறது என்கிறார் டாக்டர் ஷ்னீடெர்.

ஆட்டத்தின் போது வெய்போ தளத்தில் ஜப்பானுக்கு எதிரான கருத்துகள் பெருமளவு பகிரப்பட்டன. மிஸுதானி மற்றும் ல்டோ குறித்து அவதூறுகளும் அதிக அளவில் பரப்பப்பட்டன.

வெறும் ஜப்பானுடனான டேபிள் டென்னிஸ் போட்டியின் போது மட்டுல்லாது, சீனாவின் லீ ஜுன்ஹுயி மற்றும் லியு யூச்சென் ஆகியோர் பேட்மின்டன் இரட்டையர் போட்டியில் தைவானிடம் தோற்றபோதும் சமூக ஊடகங்களில் கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள். வெய்போவில் ஒருவர், “நீங்கள் தூங்குகிறீர்களா? முயற்சியே எடுக்கவில்லை. கேவலம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. சீனா, தைவானைத் தன்னுடைய மாகாணமாகப் பார்க்கிறது. ஆனால் தைவானியர்கள் தனி நாடு கோரி வருகிறார்கள்.

(நன்றி BBC)