பளுதூக்குதல் விளையாட்டில் சரித்திரம் படைத்த சூரன்-ப்ரேஸ் டீமாஸ்

ஒரு ஒலிம்பிக் பதக்கத்துக்கே தசாப்த கால முயற்சியும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பளு தூக்குதல் போட்டியில் கிரேக்க கடவுளாக இருந்து வசீகரித்திருக்கிறார்.

கிரீஸ் அவரது தாய் நாடு அல்ல. தன் சொந்த நாட்டின் அரசியல் சூழலால் தாய் நாட்டை விட்டு, கிரீஸுல் குடியேறி, அந்நாட்டுக்கு புகழ் சேர்த்தவர். அவர் பெயர் ப்ரேஸ் டீமாஸ் (Pyrros Dimas).

இன்று கூட இந்தியாவின் பல முக்கிய பளுதூக்கும் வீரர்களின் ஆதர்ச நாயகர்களில் ஒருவர்.

இவரின் அனாயாசமான பளு தூக்கும் ஸ்டைலுக்கு உலகின் பல மூலைகளிலிருக்கும் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சொக்கிப் போகின்றனர்.

1992 – 2004 கால கட்டத்தில் அப்போதைய உலகின் தலை சிறந்த பளு தூக்கும் வீரர்களான ஹலீல் முட்லு (துருக்கி), ஹுசேன் ரெசாசாடே (இரான்), நயிம் சுலைமனோக்லு (துருக்கி) ஆகியோர்களும் ப்ரேஸ் டிமாஸ் காலத்தில் தான் புதிய சாதனைகளைப் படைத்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் வெவ்வேறு உடல் எடைப் பிரிவில் கலந்து கொண்டனர்.

அல்பேனியா நாட்டைச் சேர்ந்த ப்ரேஸ் டிமாஸ், 1991ஆம் ஆண்டு சில அரசியல் சூழல்களால் அந்நாட்டை விட்டு வெளியேறி, கிரீஸ் நாட்டில் குடியேறினார், கிரீஸ் குடியுரிமை வழங்கப்பட்டது.

கீரீஸ் நாட்டின் முன்னாள் ஒலிம்பிக் பளு தூக்கும் வீரரான க்றிஸ்டோஸ் ஐகோவோவின் கீழ் பயிற்சி பெற்றார் டிமாஸ். வலேரியோஸ் லியோனிடிஸ், அகேகியோஸ் ககியாஸ்விலிஸ் போன்ற பளு தூக்கும் வீரர்களுக்கும் க்றிஸ்டோஸ் தான் குரு.

1992ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் யாரோ ஒரு புதிய வீரர் என்கிற அளவில் களமிறங்கினார் டிமாஸ்.

கிரேக்க கடவுளர்களைப் போன்ற கட்டுமஸ்தான உடலமைப்பு, பளு தூக்கப் போகிறவர் போல் இல்லாமல் ஏதோ பூ பறிக்கச் செல்வது போன்ற புன்னகை, வாய் வழியாக மூச்சு விடும் போது அழகாய் அசையும் தலை முடி, வெற்றிகரமாக தன் முயற்சியை நிறைவு செய்த பின் இரு பக்கமும் பார்த்து சிரிக்கும் அந்த சிரிப்பு… என ஒரு நாயகனுக்கே உரிய பாணி ப்ரேஸ் டிமாஸிடம் இருந்தது.

பெரும்பாலான வீரர்கள் ஜர்க்கை இரு கால்களை முன் பின் பரப்பி அடிப்பார்கள். ஆனால் டிமாஸ் புஷ் ஜர்க் முறையில் நின்ற இடத்தில் இருந்தே அடிப்பார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் ஆராவாரங்களை ஏற்படுத்தியது.

ப்ரேஸ் டிமாஸ் என்கிற நாயகன் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் 82.5 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். ஒட்டுமொத்த கிரீஸ் நாடும் ப்ரேஸ் டிமாஸுக்கு பவபிரம்மாண்ட வரவேற்பைக் கொடுத்தது.

1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், கிரீஸ் நாட்டின் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையை ப்ரேஸ் டிமாஸுக்கு வழங்கியது.

ப்ரேஸ் டிமாஸ் தன் உச்சகட்ட ஃபார்மில் இருந்த காலமது. 83 கிலோ எடை பிரிவில் ஸ்னாச் முறையில் 180 கிலோ எடையையும், க்ளீன் அண்ட் ஜர்க் (clean and jerk) முறையில் 213 கிலோவையும் தூக்கி உலக சாதனை படைத்தார்.

2000ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் ப்ரேஸ் டிமாஸ் மீது ஒரு பெரிய அழுத்தம் இருந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த நயிம் சுலைமனோக்லோ தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். அச்சாதனையை சமன் செய்ய வேண்டும் என்பது தான் டிமாஸ் முன் இருந்த 1000 டன் அழுத்தம்.

அது அவர் செயல்பாட்டை அப்பட்டமாக பாதித்தது எனலாம். 85 கிலோ உடல் எடைப் பிரிவில், 175 கிலோ எடையை ஸ்னாச்(snacth) முறையில் தூக்க முதல் முறை அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் முயற்சியே தோல்வி. அப்போது என்னால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என ஒலிம்பிக்ஸ் சேனலிடம் ஒரு பேட்டியில் இது குறித்து பேசினார்.

இரண்டாம் முறை மேற்கொண்ட முயற்சியும் தோல்வி. கடைசி முயற்சியில் டிமாஸ் மிக அமைதியாக 175 கிலோவை தூக்கி போட்டியில் தன் இருப்பை உறுதி செய்தார்.

க்ளீன் அண்ட் ஜர்க்(clean and jerk) முறையில் அதிகபட்சமாக 215 கிலோ எடையைத் தூக்கினார். ஸ்னாச் + க்ளீன் அண்ட் ஜர்க்(snatch+clean and jerk) சேர்த்து ஒட்டுமொத்தத்தில் டிமாஸ் 390 கிலோ எடையை தூக்கி இருந்தார்.

பிரச்சனை என்னவென்றால் அவரோடு சேர்ந்து ஜெர்மனியின் மார்க் ஹஸ்டர் மற்றும் ஜார்ஜியாவின் ஜியார்ஜி அசனிட்ஸும் 390 கிலோ எடையைத் தூக்கி இருந்தனர்.

இப்படி பளு தூக்குதலில் ஒரே அளவுக்கு எடையைத் தூக்கி இருக்கிறார்கள் என்றால் அவர்களது உடல் எடையின் அடிப்படையில் தான் பதக்கங்கள் வழங்கப்படும்.

டிமாஸ் 84.06 கிலோ, மார்க் ஹஸ்டர் 84.22 கிலோ, ஜியார்ஜி அசனிட்ஸ் 84.70 கிலோ உடல் எடை இருந்ததால், அவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வழங்கப்பட்டது.

மயிரிழையில் மூன்று முறை தொடர்ந்து தங்கம் வென்ற ஒலிம்பிக் வீரர் என்கிற சுலைமனோக்லுவின் சாதனையை சமன் செய்தார் ப்ரேஸ் டிமாஸ்.

1996ஆம் ஆண்டு காணப்பட்ட துடிப்பான, நாயகத் தோற்றம் கொண்ட வசீகர இளைஞனை அப்போட்டியில் காண முடியவில்லை.

2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, ப்ரேஸ் டிமாஸ் இரண்டு முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 2004 ஒலிம்பிக் போட்டிக்கு முன் கை மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டு இருந்தது அவருக்கு.

2004 ஏதென்ஸ் நகரில் ப்ரேஸ் டிமாஸின் படத்தோடு “Impossible is Nothing” என்கிற விளம்பரங்கள் நாடெங்கும் காணப்பட்டன. இதுவரை சாத்தியமற்றதை சாத்தியமாக்க இத்தனை சிக்கல்களுக்குப் பிறகும் நான்காவது முறை பதக்கம் வெல்ல களமிறங்கினார் ப்ரேஸ் டிமாஸ்.

2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டார் டிமாஸ். கிரேக்க கடவுளின் தோற்றம் காணாமல் போயிருந்தது. பெரும் அழுத்தோடும், பதற்றத்துடன் இருப்பது போல காணப்பட்டார் டிமாஸ். அவரின் ஸ்டைலான தலை முடியைக் காணவில்லை.

என்ன தான் பதற்றங்கள், காயங்கள் இருந்தாலும், காலம் தனக்கு கொடுத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தார் ப்ரேஸ் டிமாஸ்.

ஸ்னாச்சில்(snacth) 175 கிலோ எடையைத் தூக்கி இருந்தார். 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தூக்கியது போல 215 கிலோவை தூக்கினால் மீண்டும் ப்ரேஸ் டிமாஸ் தங்கம் வென்றிருப்பார்.

ஆனால் கால் மூட்டில் அறுவை ச்கிச்சை செய்திருந்த, வயதான டிமாஸ் முதல் முயற்சியே 202.5 கிலோ மட்டுமே தூக்கினார். 205 கிலோ தூக்கும் இரண்டாம் முயற்சியும், 207.5 கிலோ தூக்கும் மூன்றாம் முயற்சியும் தோல்வியுற்றது.

கிரேக்க கடவுள் தன் கால் தடத்தை நிரப்ப, மற்ற வீரர்களை அழைப்பது போல, தன் காலணிகளை பளுதூக்கும் மேடையிலேயே விட்டுச் சென்றார்.

இன்றுவரை எந்த ஒரு பளு தூக்கும் வீரரும் ப்ரேஸ் டிமாஸைப் போல நான்கு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றதில்லை.

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நிகழும் பதக்க நிகழ்ச்சி, ப்ரேஸ் டிமாஸால் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நீண்டது என்கிறது ஒலிம்பிக்ஸ் வலைதளம். ப்ரேஸ் டிமாஸின் பெயரைச் சொல்லி அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தி வழியனுப்பினார்.

முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு, தன் மீது அன்பு பொழிந்த ரசிகர்களுக்கு நெஞ்சில் கை வைத்து நன்றி கூறி விடைபெற்றார் ப்ரேஸ் டிமாஸ்.

(நன்றி BBC)