ஆப்கானிஸ்தானில் தலீபான் தளபதி உள்பட 400 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு; ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 400 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதிகரிக்கும் தலீபான்களின் ஆதிக்கம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் சுமார் 20 ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்டன.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் சரிபாதி பகுதிகளை கைப்பற்றி விட்ட தலீபான்கள் ஒட்டுமொத்தஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.கடந்த சில வாரங்களில் மட்டும் எண்ணற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான முக்கிய எல்லை பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.அந்த வகையில் ஹெல்மெண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் காவை கைப்பற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அரசு படைகளுடன் தலீபான்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

94 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

இதனிடையே பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் லஷ்கர் கா நகரை சேர்ந்த பொது மக்களை அங்கிருந்து வெளியேறும்படி ராணுவம் கேட்டுக்கொண்டது.இந்தநிலையில் ஹெல்மெண்ட் மாகாணத்துக்கான தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி மலாவி முபாரக் தலைமையில் ஏராளமான பயங்கரவாதிகள் லஷ்கர் கா நகரின் ஒரு பகுதியில் கூடியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் விமானப்படை விமானங்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து குண்டு மழை பொழிந்தன.ராணுவத்தின் இந்த அதிரடி வான் தாக்குதலில்‌ தலீபான் பயங்கரவாத தளபதி மலாவி முபாரக் உள்பட 94 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 16 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.

ராணுவத்துக்கு ஆதரவாக மக்கள் பேரணி

இதனிடையே காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தரை வழியாகவும், வான் வழியாகவும் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 406 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களுடன் சண்டையிட்டு வரும் அரசு

படைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பிரமாண்ட பேரணியை நடத்தினர்.

தலீபான்களை கண்டித்து கோஷம்

முதலாவதாக ஆப்கானிஸ்தானின் 3-வது மிகப்பெரிய நகரமான ஹெரட் நகரில்‌ அரசு படைகளுக்கு ஆதரவான இந்த பேரணி தொடங்கியது. இது பற்றிய செய்தி வேகமாக பரவியதை தொடர்ந்து தலைநகர் காபூல் உட்பட அனைத்து

மாகாணங்களிலும்  மக்கள் ராணுவத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து பேரணியில் ஈடுபட்டனர். அப்படி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். பேரணியில் பங்கேற்ற மக்கள் தலீபான்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

dailythanthi